Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 மார்ச் (ஹி.ச)
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது.
இதற்கான அறிவிப்பு கடந்த மார்ச் 15-ம் தேதி வெளியாது. இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து உள்ளன.
2106 பறக்கும் படைகள், நிலை கண்காணிப்பு படைகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றன. மேலும், விமான நிலையங்களையும் கண்காணிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, சென்னை சர்வதேச விமான நிலையம், சென்னை விமான நிலைய கார்கோ பகுதி ஆகியவற்றை கண்காணிக்க, சிறப்பு அதிகாரிகளை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
சென்னை சர்வதேச விமான நிலையத்தின் வருகை, புறப்பாடு பகுதிகளில் சுங்கச் சோதனைகளை கண்காணிக்க, சுங்கத்துறை இணை ஆணையர் அந்தஸ்தில், சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல், சென்னை விமான நிலைய கார்கோ பகுதிகளில், சரக்குகள் ஏற்றுமதி, இறக்குமதி பகுதிகளில் சுங்கச்சோதனை பிரிவுகளில் கண்காணிப்பதற்காக இணை ஆணையர் அந்தஸ்தில் மற்றொரு சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர்கள் சென்னை விமான நிலையத்தில் பயணிகள், பார்சல்களை தீவிரமாக கண்காணித்து, சந்தேகத்துக்கிடமான தங்கம், வெள்ளி, மின்சாதன பொருட்கள், போதைப் பொருட்கள், போதை மாத்திரைகள், கணக்கில் வராத ரொக்கம் போன்றவைகள் வந்தால், அவற்றை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடத்தலின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று முழுமையாக விசாரித்து, டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் அதிகாரிக்கு உடனடியாக அறிக்கை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அத்துடன், சென்னை விமான நிலையத்தில் உள்ள வருமான வரித் துறையினரும், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களும் கூடுதல் கண்காணிப்பு அலுவலர்களை நியமித்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b