Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 மார்ச் (ஹி.ச.)
சென்னை ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் ஜோஸ்பின் (26). இவருடைய கணவர் லோகேஸ்வரன். ஜோஸ்பின் பிரபல ரவுடி ஆதம்பாக்கம் ’ஏ+’ சரித்திர பதிவேடு குற்றவாளி ராபினின் தங்கை ஆவார். இவர் நேற்று மதியம் வீட்டில் தனியாக இருக்கும் போது திடீரென்று அவருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளது.
அதன் காரணமாக வெகு நேரம் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு, பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளார்.
சிறிது நேரம் கழித்து அவருடைய தங்கை ஷெரின் வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது ஜோஸ்பின் கீழே மயங்கிய நிலையில் கிடந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஷெரின், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஜோஸ்பினை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.
ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஜோஸ்பின் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஆதம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே இறந்தவர் பிரபல ரவுடி ராபினின் மூத்த தங்கை என்பதால், அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக கடந்த 2021ஆம் ஆண்டு நாகூர் மீரான் என்பவரை வெட்டி படுகொலை செய்த வழக்கில், கோயம்புத்தூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடி ராபின் பரோலில் வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதுமட்டுமின்றி ரவுடி ராபினை பழி வாங்க நாகூர் மீரானின் கூட்டாளிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
நாகூர் மீரானின் தற்போது வெளியிலுள்ள கூட்டாளிகள் மணிகண்டன் (எ) டெம்போ மணி, அப்பு இளையராஜா, மோகன் (எ) பிரசன்னகுமார், ராஜேஷ் (எ) கோழிக்கால் ராஜேஷ், சிமிலி விஜயகுமார், பிரவீன் (எ) கறிக்கடை பிரிவின், ரவிக்குமார் (எ) கரிமேடு ரவி மற்றும் இவர்களது கூட்டாளிகளுடன் சேர்ந்து செல்லும் வழியிலேயோ அல்லது ஈமச்சடங்கு செய்யும் இடத்திலோ தாக்கி கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனால் அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுப்பதற்காக ஆதம்பாக்கம், அம்பேத்கர் நகர் பகுதி முழுவதையும் போலீசார் தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.
மேலும் யாராவது ரவுடிகளின் நடமாட்டமோ, சந்தேகத்திற்குரிய நபர்கள் நடமாட்டமோ உள்ளதா? என போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
Hindusthan Samachar / ANANDHAN