Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 மார்ச் (ஹி.ச.)
இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் இதயங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ரமலான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
நன்மைகள் தான் மனிதத்தை உயர்த்தும் என்ற உன்னத தத்துவத்தை உலகிற்கு உணர்த்தும் இரமலான் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் இதயங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமான இரமலான் மாதத்தில் தான் இறை தூதர் நபிகள் நாயகத்திற்கு குரான் வெளிப்படுத்தப்பட்டது என்பதால், அதைக் குறிக்கும் வகையில் தான் இந்த மாதத்தில் இஸ்லாமியர்கள் பகல் நேரத்தில் நோன்பிருந்து நபிகளையும், குரானையும் போற்றுகின்றனர்.
இஸ்லாத்தின் புனிதமான 5 கடமைகளில் முக்கியமானது இரமலான் மாதம் முழுவதும் சூரிய உதயம் முதல் மறைவு வரை மேற்கொள்ளப்படும் நோன்பு ஆகும். இது பற்றி இறைவன் அவரது திருமறையில், மனித வாழ்க்கையில் அகமும், புறமும் தூய்மையடைய ஒரு பயிற்சிதான் நோன்பு என்று குறிப்பிடுகிறார். அகமும், புறமும் தூய்மையடைந்து விட்டால் மனிதர்கள் மகான்களாக மாறி விடுவார்கள்.
உலகிற்கு பயனளிக்கக் கூடிய இத்தகைய மாற்றத்தை மனிதனிடம் ஏற்படுத்துவது தான் இரமலான் திருநாளாகும்.
நோன்புக் காலத்தில் மற்றவர்களுக்கு உதவுதல், காலையில் உட்கொள்ளும் உணவையும், மாலையில் நோன்பு திறந்ததும் உட்கொள்ளும் உணவையும் அனைவரும் பகிர்ந்து உண்ணுதல், மோதலில் ஈடுபடாமல் இருத்தல், தீயவற்றை பேசாதிருத்தல் ஆகியவற்றை நோன்புக் காலத்தில் இஸ்லாமியர்கள் தவறாமல் கடைபிடிக்கின்றனர். அந்த வகையில் இஸ்லாமியர்களை உன்னதமாக்கும் திருநாளே இரமலான்.
இஸ்லாம் போதிக்கும் இந்த நற்குணங்கள் அனைத்தும் உலகமெங்கும் நிறைய வேண்டும். உலகின் மிகப்பெரிய சாத்தானான மது ஒழிக்கப்பட வேண்டும். உலகம் முழுவதும் அன்பு, நல்லிணக்கம், சகிப்புத் தன்மை, சகோதரத்துவம், ஈகை உள்ளிட்ட நற்குணங்கள் பெருகவும், அமைதி, வளம், முன்னேற்றம், ஒற்றுமை, மகிழ்ச்சி, கல்வி, வளர்ச்சி ஆகியவை தழைக்கவும் உழைக்க இந்த புனிதமான நாளில் நாம் அனைவரும் உறுதியேற்றுக் கொள்வோம் என்று கூறி மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ