சிறுவர்களை பயன்படுத்தி பிரச்சார கோஷம் - தவெக மாவட்ட செயலாளர் மீது வழக்கு பதிவு
ராமநாதபுரம், 21 மார்ச் (ஹி.ச.) தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை மும்முரப்படுத்தி உள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில், உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்னமும் வேட்பாளர் அறிவிக்கப்
மலர்விழி


ராமநாதபுரம், 21 மார்ச் (ஹி.ச.)

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை மும்முரப்படுத்தி உள்ளன.

ராமநாதபுரம் மாவட்டத்தில், உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்னமும் வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையில் தேர்தல் பரப்புரை தீவிரமடைந்து வரும் நிலையில், சிறுவர்களை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தியதாக த.வெ.க நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் அருகே உள்ள திரு உத்தரமாசமங்கை பகுதியில் நேற்று மாலை நடைபெற்ற தேர்தல் பரப்புரையின் போது, த.வெ.க ராமநாதபுரம் கிழக்கு மாவட்டச் செயலாளர் மலர்விழி மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிறுவர்களை ஈடுபடுத்தி கோஷங்கள் எழுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

குறிப்பாக, “ஓம் சக்தி பராசக்தி, தி.மு.க ஒரு தீய சக்தி” என்ற அரசியல் கோஷத்தை சிறுவர்களிடம் சொல்லவைத்து வாக்குச் சேகரிப்பில் பயன்படுத்தியதாக புகார் அளிக்கப்பட்டது.

இது தொடர்பான வீடியோவும் இணையதளத்தில் வைரலானது. இந்த சம்பவம் தொடர்பாக தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டதாகக் கூறி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை மேற் கொண்டனர்.

பின்னர் கிடைத்த முதற்கட்ட தகவல்களின் அடிப்படையில், மலர்விழி மற்றும் அவருடன் தொடர்புடைய சில நிர்வாகிகள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

குழந்தைகளை தேர்தல் பிரசாரங்களில் பயன்படுத்துவது சட்டவிரோதம் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் ராமநாதபுரம் மாவட்ட அரசியல் சூழ்நிலையை மேலும் கடுமையாக்கியுள்ளது.

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் கண்காணிப்பு குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam