தேமுதிகவுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வரும் - எல்.கே.சுதீஷ்
வேலூர், 21 மார்ச் (ஹி.ச.) சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை எம்.பி. இடம் ஒதுக்கப்பட்ட நிலையில், அக்கட்சியின் பொருளாளர் எல்.கே.சுதீஷ் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநிலங்களவை எம்.பி.யான பிறக
LK Sudheesh


வேலூர், 21 மார்ச் (ஹி.ச.)

சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை எம்.பி. இடம் ஒதுக்கப்பட்ட நிலையில், அக்கட்சியின் பொருளாளர் எல்.கே.சுதீஷ் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மாநிலங்களவை எம்.பி.யான பிறகு, எல்.கே.சுதீஷ் முதல் முறையாக, தனது சொந்த ஊரான குடியாத்தம் அருகே உள்ள சேம்பேடு கிராமத்திற்கு வருகை தந்தார்.

அவருக்கு கட்சியினரும், உள்ளூர் மக்களும் மேளதாளம் முழங்க பட்டாசு வெடித்து, மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதைத் தொடர்ந்து, எல்.கே.சுதீஷ் தனது சொந்த ஊரில் உள்ள குலதெய்வ கோவிலில் வழிபாடு செய்தார்.

அவர் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டதை கொண்டாடும் வகையில் உள்ளூர் மக்களும், கட்சியினரும் கேக் வெட்டி கொண்டாடினர்.

இந்த நிகழ்வின்போது, அங்கு வந்த தேர்தல் பறக்கும் படையினர், அவருடைய காரை சோதனை செய்ததனர்.

இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

பின்னர் செய்தியாளர்களிடம் எல்.கே.சுதீஷ் பேசுகையில்,

மாநிலங்களவை தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு முதன்முறையாக என் குலதெய்வத்தை தரிசிக்க வந்துள்ளேன்.

திமுக கூட்டணியில் எங்களுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து அறிவிப்பு விரைவில் வரும்.

அதன் பிறகு மீண்டும் இங்கு வந்து குலதெய்வத்தை வணங்கி பிரச்சாரத்தை தொடங்குவேன் என்றார்.

ஆம்பூர் தொகுதியில் பிரேமலதா போட்டியிடுவாரா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர்,

நான் ஆம்பூரில்தான் படித்தேன், அங்கு எனக்கு பல இஸ்லாமிய நண்பர்கள் உள்ளனர்.

தேர்தல் காலம் என்பதால் நான் ரம்ஜான் தொழுகையில் கலந்து கொண்டது பேசும் பொருளாகியுள்ளது.

ஆனால் ஆம்பூர் தொகுதியில் தேமுதிக போட்டியிடுவது பற்றி திமுகவே இறுதி முடிவு எடுக்கும்.

2006-ல் குடியாத்தம் தொகுதியில் நான் போட்டியிட்டபோது 30 ஆயிரம் வாக்குகள் பெற்றேன்.

அப்போது தேமுதிக கட்சியாக அல்லாமல், ரசிகர் மன்றம் என்ற அளவில் இருந்தது.

பின்னர் கட்சியாக உருவெடுத்த பிறகு அதிக வாக்குகள் பெற்றாலும் வெற்றி பெற முடியவில்லை.

நடிகர்கள் கட்சி தொடங்கினால் வெற்றி பெறுவது கடினம்தான் என்று தெரிவித்தார்.

நான் எம்.பி. ஆன பிறகு என்னுடைய ஊரில், என் குலதெய்வத்தை வழிபடுவது மிகுந்த மகிழ்ச்சியும் ஆனந்தமும் அளிக்கிறது என்று கூறிய அவர், ராமதாஸ் – சசிகலா கூட்டணிக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

Hindusthan Samachar / ANANDHAN