தி.மு.க சார்பில் அனுமதியின்றி 100 பட்டிகள் தயார் நிலையில் உள்ளது -முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
கரூர், 21 மார்ச் (ஹி.ச) தமிழ்நாடு சட்டப்பேரை தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்று, வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால், அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளை துரிதப்படுத்தியுள்ளனர்.
MR Vijayabaskar


கரூர், 21 மார்ச் (ஹி.ச)

தமிழ்நாடு சட்டப்பேரை தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்று, வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதனால், அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளை துரிதப்படுத்தியுள்ளனர்.

மேலும், சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 30 தொடங்கி, ஏப்ரல் 6ஆம் தேதி நிறைவடைகிறது.

தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில், கரூர் தொகுதி மட்டும் அதிக கவனம் பெற்றதாக உள்ளது.

அதற்கு முக்கிய காரணம், திமுகவின் மாவட்ட செயலாளராக உள்ள செந்தில் பாலாஜியும், அதிமுகவின் மாவட்ட செயலாளராக உள்ள முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் நேருக்குநேர் அரசியல் களத்தில் களப்பணி ஆற்றுவதே.

கிட்டத்தட்ட இவர்கள் இருவரும் தான் மோதப் போகிறார்கள் என்பது உறுதியாகிவிட்டதால், கரூரில் கடும் போட்டி நிலவி வருகிறது.

இதுபோன்ற சூழலில், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான ரவிக்குமாரை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி ஏற்பாட்டில், கரூர் தொகுதியில் ஆடு, மாடுகளை அடைப்பது போன்று 100 இடங்களில் தகரக் கொட்டகைகள் (மனிதப்பட்டி) அமைக்கப்பட்டு வருகிறது.

முறையான அனுமதியில்லாமல் அதை அமைத்து வருகின்றனர்.

48 இடங்களில் போடப்பட்டுள்ள பட்டிகளின் புகைப்பட ஆதாரங்களை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பித்துள்ளோம்.

தேர்தல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கியதிலிருந்து, அதில் வாக்காளர்களை அடைத்து வைத்து தினந்தோறும் அறுசுவை உணவு வழங்கி, நாளொன்றுக்கு ரூ.500 வழங்க திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தபோது,

சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் வேடிக்கை பார்த்துவிட்டு, நடவடிக்கை எடுக்காமல் திரும்புகின்றனர்.

கரூரில் உள்ள அனைத்து அதிகாரிகளும், திமுகவின் கைக்கூலிகள்.

அவர்களை வேறு மாவட்டத்திற்கு மாற்றாமல் தேர்தலை நடத்துவது என்பது, நியாயமான தேர்தலாக இருக்காது என குற்றஞ்சாட்டினார்.

இந்த சம்பவம் தொடர்பாக கரூர் வருகை தந்துள்ள தேர்தல் பார்வையாளர்களையும் சந்தித்து மனு அளிக்கவுள்ளோம்.

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 230 தொகுதிகளுக்கு ஒரு விதி என்றால், கரூரில் உள்ள 4 தொகுதிகளுக்கும் மட்டும் தனி விதி.

அதிலும், கரூர் தொகுதிக்கு மட்டும் சிறப்பு சட்டம்.

எனவே, வாக்காளர்களை ஆடு, மாடுகளைப் போல் அடைப்பதை கண்டித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

அடுத்த சில மணி நேரங்களிலேயே கரூர் திமுகவின் நகர செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.

அப்போது, அதிமுக எம்.ஆர்.விஜயபாஸ்கர் தோல்வி பயத்தால், திமுகவின் மீது பொய்யான புகாரை தேர்தல் ஆணையத்தில் அளித்திருப்பதாக மாவட்ட வருவாய் அலுவலரிடம் புகாரளித்தனர்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கரூர் மாநகராட்சி துணை மேயர் சரவணன்,

திமுக தேர்தல் ஆணையத்தில் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி வருகிறது.

கடந்த 5 ஆண்டுகளாக, பொறுப்பிலிருந்த செந்தில் பாலாஜி எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்து, கரூர் மாவட்டத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றுள்ளார்.

இதனால் தான் அதிமுகவின் தேர்தலை சந்திக்க அஞ்சுகின்றனர்.

தோல்வி பயத்தால், பொய்யான புகார்களை வழங்கி வருகின்றனர்.

கரூர் தொகுதியில் மட்டும் 9 தேர்தல் பணிமனைகளை அனுமதி பெற்று நிறுவியுள்ளோம்.

மற்றவை திமுக சார்பில் அமைக்கப்பட்டது அல்ல என்றார்.

Hindusthan Samachar / ANANDHAN