Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 21 மார்ச் (ஹி.ச.)
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் - 2026, வரும் 23.04.2026 அன்று நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள் முதல் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.
இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்திற்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் தேர்தல் விதிமீறல்களைக் கண்காணிக்க 24 மணி நேரமும் பறக்கும் படைகள் (Flying Squads) மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்கள் (Static Surveillance Teams) தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன.
இக்குழுக்கள் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்படும் பணம் மற்றும் பொருட்களைக் கைப்பற்றும் பணியில் ஈடுபட்டுள்ளன.
நேற்று (மார்ச் 20 ஆம் தேதி) வரை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் கைப்பற்றப்பட்ட ரொக்கம் மற்றும் பொருட்களின் விவரங்களைப் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க. இளம்பகவத் தெரிவித்துள்ளார்:
உரிய ஆவணங்களின்றிப் பறிமுதல் செய்யப்பட்ட மொத்த ரொக்கம்: ரூ. 20,43,380/-
கைப்பற்றப்பட்ட இலவசப் பொருட்களின் மதிப்பு: ரூ. 20,280/-
பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களின் மதிப்பு: ரூ. 15,647/-
உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து விடுவிக்கப்பட்ட ரொக்கம்: ரூ. 6,54,600/-
தேர்தல் நடத்தை விதிகளைப் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் முழுமையாகப் பின்பற்றி, தேர்தல் ஆணையத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b