Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 மார்ச் (ஹி.ச.)
சென்னை, சௌகார்பேட்டை, சின்ன நாயக்கன் தெருவில் வசித்து வரும் திலீப்குமார் என்பவர் சௌகார்பேட்டை பகுதியில் வெள்ளி வியாபாரம் செய்து வருகிறார்.
திலீப்குமார் வழக்கமாக வியாசர்பாடியில் வெள்ளி பட்டறை நடத்தி வரும் முருகன் என்பவரிடம் வெள்ளி பொருட்கள் செய்து வந்த நிலையில், கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வெள்ளி சொம்பு உட்பட பொருட்கள் செய்ய 30.5 கிலோ வெள்ளி கட்டியை முருகனிடம் கொடுத்ததாக நெரிகிறது.
இதே போல ஆசிப் என்பவரும் 15 கிலோ வெள்ளி கட்டியை கொடுத்ததாகவும், இந்நிலையில் 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முருகன் இறந்து விட்டதால், திலீப்குமார் மற்றும் ஆசிப் ஆகியோர் வெள்ளி பட்டறையை கவனித்து வந்த முருகனின் மனைவி தனலட்சுமி, முருகனின் அண்ணன் சதிஷ்குமார் மற்றும் தனலட்சுமியின் தந்தை வேதாசலம் ஆகியோரிடம் தங்களது வெள்ளி கட்டிகளை திரும்ப கேட்டபோது, மூவரும் தருவதாக கூறி காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் வெள்ளி பொருளோ, வெள்ளி கட்டியோ தரமுடியாது எனக்கூறி கொலை மிரட்டல் விடுத்து அனுப்பியதாகவும், தங்களை ஏமாற்றிய 3 நபர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து தங்களது வெள்ளி கட்டியை மீட்டு திரும்படியும் திலீப்குமார் என்பவர் யானைகவுனி காவல் நிலைய குற்றப்பிரிவில் புகார் கொடுத்ததின்பேரில், மோசடி பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
யானைகவுனி காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்ததில் புகார்தாரர் குறிப்பிட்டிருந்தது உண்மையென தெரியவந்ததின்பேரில், வழக்கில் தொடர்புடைய புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி, சதீஷ்குமார், பட்டாளம் பகுதியைச் சேர்ந்த முதியவர் வேதாசலம் ஆகிய 3 நபர்களை நேற்று (20.03.2026) கைது செய்தனர்.
மேலும் விசாரணையில் தனலட்சுமி, சதீஷ்குமார், வேதாசலம் ஆகிய மூவரும் முருகனுக்கு சௌகார்பேட்டை பகுதியில் வியாபாரிகள் தர வேண்டிய வெள்ளி கட்டிகளை வாங்கியும், இருவரிடம் மோசடி செய்த வெள்ளி கட்டிகளையும் விற்று, வீடு வாங்கிய கடனை அடைத்தும், கார் வாங்கியும், செலவு செய்துள்ளது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 3 பேரை விசாரணைக்குப் பின்னர் நேற்று (20.03.2026) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.
Hindusthan Samachar / P YUVARAJ