Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 21 மார்ச் (ஹி.ச.)
புனித ரமலான் பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடி ஈத்கா மைதானத்தில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்று உலக அமைதி மற்றும் சகோதரத்துவத்திற்காகப் பிரார்த்தனை செய்தனர்.
தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசல் இமாம் ஸதக்கத்துல்லாஹ் தலைமையில் இந்தச் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, ஜாமியா பள்ளிவாசல் தலைமை இமாம் அப்துல் அளீம் சிறப்பு துவா (பிரார்த்தனை) ஓதினார்.
அப்போது அவர் பேசுகையில்
தற்போது மேற்காசியாவில் நடைபெற்று வரும் போரினால் குழந்தைகள், பெண்கள் எனப் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். இந்தப் போர் உடனடியாக முடிவுக்கு வர வேண்டும். உலகம் முழுவதும் அமைதி திரும்பவும், மக்களிடையே சகோதரத்துவம் தழைக்கவும், இயற்கை பேரிடர்களிலிருந்து மனிதகுலம் காக்கப்படவும் இறைவனை வேண்டுகிறோம்.
என்று உருக்கமாகக் குறிப்பிட்டார்.
மாவட்ட அரசு காஜி கூட்டமைப்புச் செயலாளர் முஜிபுர் ரகுமான் உரையாற்றுகையில்,
நோன்புப் பெருநாளான இன்று எவரும் உணவில்லாமல் இருக்கக் கூடாது.
நோன்பின் மகிமையை உணர்ந்து, வசதியுள்ளவர்கள் எளியவர்களுக்குத் தாராளமாக உதவ வேண்டும் என வலியுறுத்தினார்.
தொடர்ந்து, ஜாமியா பள்ளிவாசல் முன்னாள் தலைவர் மீராசா அனைவருக்கும் ரமலான் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இவ்விழாவில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, தூத்துக்குடியில் வசிக்கும் வடமாநில இஸ்லாமியர்களும் திரளாகக் கலந்துகொண்டனர். புத்தாடை அணிந்து வந்திருந்த ஆயிரக்கணக்கானோர், அல்லாஹு அக்பர் என முழக்கமிட்டுத் தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகை முடிந்ததும் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் ஜாமியா பள்ளிவாசல் முன்னாள் துணைத்தலைவர் சாகுல் சிராஜுதீன், முன்னாள் செயலாளர் எம்.எஸ்.எஃப். ரகுமான், முன்னாள் பொருளாளர் இப்ராகிம் மூஸா, கிரசன்ட் பள்ளி முன்னாள் செயலாளர் முகமது உவைஸ், முஸ்லிம் சமுதாய சங்கத் தலைவர் ஏ.கே. மைதீன், வழக்கறிஞர் சுலைமான், மேட்டுப்பட்டி மீராசா, அரபிக் கல்லூரித் தலைவர் நவரங் சகாப்தின் மற்றும் முக்கியப் பிரமுகர்களான சம்சுதீன், கிதர் பிஸ்மி, யூசுப், ஜாபீர், பீர்மைதீன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Hindusthan Samachar / vidya.b