Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 மார்ச் (ஹி.ச.)
தமிழ்நாட்டின் மையப்பகுதியில் காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஒரு முக்கிய நிர்வாக மற்றும் தொழில்மயமான மாவட்டமாக திருச்சி மாவட்டம் உள்ளது.
4,404 ச.கி.மீ பரப்பளவு கொண்ட இது, 10 மாவட்டங்களை எல்லையாகக் கொண்டு, மாநிலத்தின் நான்காவது பெரிய நகரமாகத் திகழும் திருச்சியானது மலைக்கோட்டை உச்சிபிள்ளையார் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயம், பாலக்கரை உலக மீட்ப்பர் பேராலயம், நத்தர்ஷா பள்ளிவாசல் என மும்மதத்தினருக்கும் வரலாறு கொண்ட மாவட்டமாகவும் முக்கிய கல்வி நிறுவனங்களுக்குப் பெயர் பெற்ற, கலாச்சார மற்றும் நவீனத்தின் கலவையாகவும் விளங்குகிறது.
மேலும், சிறு குறு தொழில் நிறுவனங்கள் சுமாராக 1850 நிறுவனங்களும், பெல், ஓஎப்டி, பொன்மலை ரயில்வே பணிமனை, மணப்பாறையில் டிஎன்பிஎல் என மத்திய, மாநில அரசுகளுக்கு சொந்தமான நிறுவனங்களும், டால்மியா, சித்தார் வெசல்ஸ் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களும், ஹெச்சிஎல், விடார்ட், ஜோஹோ, ஒமேகா, கேப்ஜெமினி (Hcl, vdart, zoho, ஒமேகா, capgemini) உள்ளிட்ட மென்பொருள் நிறுவனங்களும் திருச்சியை மையமாக வைத்து இயங்குகின்றன.
ஒன்பது சட்டமன்ற தொகுதிகள் அமைந்துள்ள திருச்சியில் த.வெ.க தலைவர் முதல் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை தொடங்கியது, தி.மு.க, ம.தி.மு.க, நாம் தமிழர் கட்சிகள் மாநாடுகள் நடத்தியது. பிரதமர் கலந்துகொண்ட என்.டி.ஏ கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, மதிமுகவுக்கு 4 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில், தங்கள் கட்சி போட்டியிட விரும்பும் தொகுதிகளான மதுரை தெற்கு, திருச்சி கிழக்கு, மணப்பாறை, சாத்தூர், வேளச்சேரி, கோவில்பட்டி, கடலூர் அல்லது புவனகிரி, நெல்லை அல்லது பாளையங்கோட்டை, பல்லடம், கிணத்துக்கடவு ஆகிய 10 தொகுதிகளை மதிமுகவின் பொது செயலாளர் வைகோ தேர்வு செய்து திமுக தலைமை இடம் அளித்துள்ளார்.
இதில், திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியும் அவர்களது விருப்ப தேர்வில் ஒன்றாக உள்ளது. இந்த நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியை தங்களுக்கு ஒதுக்க கோரி மாநகர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் இந்த வெற்றி தொடர வேண்டும் என்பதில் தி.மு.க. உறுதியாக இருந்து வருகிறது. அதற்கான செயல்திட்டங்கள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டது. திருச்சி மேற்கு தொகுதியில் வெற்றி பெற்ற கே.என்.நேரு தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராகவும், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சராகவும் உள்ளனர்.
திருச்சி மேற்கு, திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று ஏற்கனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருச்சி கிழக்கு தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்று மாநகர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்திலும் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கம்யூனிஸ்டு, காங்கிரஸ் கட்சிகளை தொடர்ந்து தற்போது தி.மு.க. கூட்டணியில் உள்ள ம.தி.மு.க.வும் திருச்சி கிழக்கு தொகுதி மீது ஒரு கண் வைத்துள்ளது. நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் ம.தி.மு.க.விற்கு 4 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளது.
இது கடந்த தேர்தலை விட 2 தொகுதிகள் குறைவு என்றாலும் 3 தொகுதிகளில் தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதியில் மட் டும் தங்களது தனி சின்னத்திலும் நிற்பது என்ற நிபந்தனையுடன் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அதனை ஏற்றுக்கொண்டு உள்ளார்.
திருச்சி கிழக்கு தொகுதியை ம.தி.மு.க. குறி வைத்து இருப்பதற்கு காரணம் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினராக துரை வைகோ எம்.பி. இருப்பது தான். கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.விற்கு ஒதுக்கப்பட்ட ஒரே தொகுதியான திருச்சியில் அக்கட்சியின் முதன்மை செயலாளரான துரை வைகோ தனி சின்னத்தில் (தீப் பெட்டி) போட்டியிட்டு சுமார் 3½ லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
திருச்சி மாநகர மக்களுக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமான தீப்பெட்டி சின்னத்தில் திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற்றால் அது தங்களுக்கு கிடைக்கும் அங்கீகாரமாக அமையும் என ம.தி.மு.க. கருதுகிறது.
மேலும் திருச்சி கிழக்கு தொகுதி சாதி, மதம், மொழி இவற்றிற்கு எல்லாம் அப்பாற்பட்டது என்பதால் வெற்றி பெறுவதும் எளிதாக கருதப்படுகிறது. கம்யூனிஸ்டு, காங்கிரஸ் கட்சிகளை தொடர்ந்து தற்போது ம.தி.மு.க.வும் திருச்சி மாவட்டத்தில்ஒரு தொகுதியை கேட்டு தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளும் திமுகவின் வசமாகவே இருந்து வருகிறது. இதே வெற்றி வருகின்ற சட்டமன்றத் தேர்தலிலும் தொடர வேண்டும் என்று திமுக தலைமை விரும்பி வருகிறது.
இப்படி இருக்கும் சூழ்நிலையில் திருச்சி கிழக்கு தொகுதியை திமுக தன் வசமே வைத்துக் கொள்ளுமா அல்லது கூட்டணி கட்சிகளான மார்க்சிஸ்ட், காங்கிரஸ், மதிமுக கட்சிகளில் எந்த கட்சிக்கு வழங்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தவெக தலைவர் விஜய் 2 தொகுதிகளில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் அவர் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
திருச்சி கிழக்கு தொகுதியில் தற்போது திமுகவின் இனிகோ இருதயராஜ் எம்எல்ஏவாக உள்ளார். இந்த தொகுதியில் கிறிஸ்தவர்கள் மற்றும் சிறுபான்மையினர் வாக்குகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b