Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 21 மார்ச் (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று ஏராளமான மீனவர்கள் நாட்டுப் படகு மூலம் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க செல்வார்கள். அதனைத் தொடர்ந்து, ஒரு வாரம் பிடித்த மீன்களுடன் மீனவர்கள் கரை திரும்புவது வழக்கம்.
அந்த வகையில், இன்று சனிக்கிழமை என்பதால் கடந்த திங்கட்கிழமை கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் கரை திரும்பினர். வழக்கத்தை விட இந்த வாரம் மீன்களின் வரத்து அதிகமாக காணப்பட்டது.
எனவே, இன்று விடுமுறை என்பதாலும், ரம்ஜான் பண்டிகை என்பதாலும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மீன்களை வாங்க ஒரே நேரத்தில் துறைமுகத்திற்கு வந்தனர். இதனிடையே, மீன் வரத்து அதிகமாக இருந்ததால், மீன்களின் விலையும் ஓரளவு குறைந்து காணப்பட்டது.
அதன்படி, வஞ்சிரம் மீன் என்று அழைக்கப்படும் சீலா மீன் கிலோ 1000 ரூபாய் வரையும், விளை மீன், ஊழி, பாறை ஆகிய ரக மீன்கள் கிலோ 250 ரூபாய் முதல் 550 ரூபாய் வரையும், சால மீன் ஒரு கூடை 2,000 ரூபாய் வரையும், வங்கனை ஒரு கூடை 2,500 ரூபாய் வரையும், சூப்பர் நண்டு ஒரு கிலோ 900 ரூபாய் வரையும், கேரை மற்றும் சூரை ஆகிய மீன்கள் கிலோ 200 ரூபாய் வரையும், மஞ்சள் கிளி மீன் கிலோ 150 ரூபாய் வரை விற்பனையானது.
கடந்த இரண்டு வாரமாக மீன் வரத்து குறைந்து, விலையும் அதிகமாக இருந்தது. இந்நிலையில், இன்று வழக்கத்தை விட விலை சற்று குறைந்து காணப்பட்டதால், பொதுமக்கள் மீன்களை போட்டிப் போட்டு வாங்கி சென்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN