Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 21 மார்ச் (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தை சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியை கைது செய்ய தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளியை தீவிரமாக தேடும் பணி நடைபெற்று வந்தது.
வேடநத்தம் பகுதியில் உள்ள ஒரு காற்றாலை அருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா வீடியோ காட்சிகள் மூலம் குற்றவாளி கண்டறியப்பட்டார். உடனே தனிப்படை போலீசார் அவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தார்கள். குற்றவாளி கைது செய்யப்பட்டது தொடர்ந்து நேற்று மாணவியின் உடலானது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதி சடங்கு நிறைவு பெற்றது.
நேற்று மாலை தூத்துக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றவாளி தர்ம முனீஸ்வரனை (36) போலீசார் ஆஜர்படுத்தினர்.
தர்ம முனீஸ்வரனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்த நீதிமன்ற உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து அவர் அங்கிருந்து பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்டார்.
சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட குற்றவாளி பாளையங்கோட்டை மத்திய சிறை சாலைக்கு கொண்டு வரப்படுவதை அறிந்த சக கைதிகள், தர்ம முனீஸ்வரன் மீது கடும் கோபத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
தர்ம முனீஸ்வரன் மீது சக கைதிகள் தாக்குதல் நடத்தும் சூழல் உருவானதால், இரவோடு இரவாக அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்து மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.
இரவு நேரத்தில் நடந்த இந்த திடீர் மாற்றத்தால் பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் இரவில் பரபரப்பு ஏற்பட்டது.
Hindusthan Samachar / ANANDHAN