Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 21 மார்ச் (ஹி.ச)
சேலம் பேருந்து விபத்தில் ஏழு பேர் உயிர்ந்ததற்கு,சாலைப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது யார்? என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
சேலம் உத்தமசோழபுரம் பகுதியில் ஏற்பட்ட அரசுப் பேருந்து விபத்து, ஏழிற்கும் மேற்பட்ட உயிர்களைப் பறித்திருப்பது மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. அப்பாவிப் பொதுமக்களின் உயிர்கள் இவ்வாறு சாலையில் பலியாவது எந்தச் சமுதாயத்திற்கும் ஏற்றதல்ல. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறது.
இந்த துயரச்சம்பவத்தில் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் அனைவரும் விரைவில் நலம்பெற்று வீடு திரும்ப வேண்டுகிறோம். அவர்களுக்கு மிக உயர்ந்த தரத்தில் சிகிச்சை வழங்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும். சிகிச்சை செலவுகள் முழுமையாக அரசால் ஏற்றுக்கொள்ளப்படுவது மனிதநேயக் கடமையாகும் என்பதையும் வலியுறுத்துகிறோம்.
இந்நிகழ்வு ஒரு தனிப்பட்ட விபத்தாக மட்டும் கருதப்படக்கூடாது. பொதுப் போக்குவரத்து பாதுகாப்பில் உள்ள குறைபாடுகள் மீண்டும் வெளிப்பட்டுள்ளன. அரசுப் பேருந்துகளின் பராமரிப்பு, ஓட்டுநர்களின் பணிநிலைகள், சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகிய அனைத்தும் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு உடனடி திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
மக்கள் உயிர் பாதுகாப்பு அனைத்து நிர்வாகத்திற்கும் முதன்மைப் பொறுப்பு என்பதை அரசு உணர்ந்து செயல்பட வேண்டியது அவசியம்.மேலும், இந்த விபத்திற்கான முழுமையான விசாரணை நடைபெற்று உண்மையான காரணங்கள் வெளிக்கொணரப்பட்டு, பொறுப்புக்கூற வேண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் மட்டுமின்றி, அவர்களின் எதிர்கால வாழ்வாதாரத்திற்கான நிலையான ஆதரவும் தமிழ்நாடு அரசு வழங்கவேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ