Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பத்தூர், 21 மார்ச் (ஹி.ச.)
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சிக்குப்பட்ட பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை, நகராட்சி துப்புரவு பணியாளார்கள் வளையாம்பட்டு பகுதியில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கில் கொட்டி, மக்கும் குப்பை மற்றும் மக்கா குப்பை என தரம் பிரித்து வரும் நிலையில், இந்த குப்பை கிடங்கில் கடந்த திங்கட்கிழமை (மார்ச் 16) மாலை தீவிபத்து ஏற்பட்டு, கொளுந்து விட்டு எரிந்தது.
இக்குப்பை கிடங்கானது சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையையொட்டி அமைந்துள்ள நிலையில், இந்த தீவிபத்தில் அதிக அளவு கரும்புகை வெளியேறியதால், அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
மேலும் அதிக புகைமூட்டம் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர்.
இத்தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாணியம்பாடி தீயணைப்புத்துறையினர், குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயை பல மணி நேரம் போராடி தண்ணீர் பீய்ச்சியடித்து கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இருப்பினும் குப்பை கிடங்கில் ஆங்காங்கே மீண்டும் மீண்டும் தீப்பற்றி கடந்த 5 தினங்களாக எரிந்து வருவதால், அவ்வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
மேலும் அவ்வழியாக செல்லும் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதாகக் கூறி, குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த அப்பகுதி மக்கள் வாணியம்பாடி நகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.
ஆனால் இதுவரையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் கோபமடைந்த வளையாம்பட்டு கிராம மக்கள், நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து நகராட்சி குப்பை கிடங்கிற்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வாணியம்பாடி நகராட்சி அதிகாரிகள் மற்றும் வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இதுகுறித்து உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
அதிகாரிகளின் வார்த்தைக்கு இணங்கி, பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Hindusthan Samachar / ANANDHAN