மாம்பலம் அருகே மூதாட்டியிடம் 9 சவரன் தங்க செயின் பறித்து சென்ற வழக்கில் பெண் உட்பட மூவர் கைது
சென்னை, 21 மார்ச் (ஹி.ச.) சென்னை மேற்கு மாம்பலம் போஸ்டல் காலனி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் தமிழ்செல்வி (63). இவரது கணவர் சின்னயா 2021 ஆண்டு உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இவரது மூத்த மகள் வெளிநாட்டில் கணவருடன்
கைது


சென்னை, 21 மார்ச் (ஹி.ச.)

சென்னை மேற்கு மாம்பலம் போஸ்டல் காலனி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் தமிழ்செல்வி (63).

இவரது கணவர் சின்னயா 2021 ஆண்டு உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இவரது மூத்த மகள் வெளிநாட்டில் கணவருடன் வசித்து வரும் நிலையில் இவர் தனது மகன் ராஜேஷ் உடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 14/3/26 அன்று மூதாட்டி தமிழ்செல்வி வீட்டில் இருந்து ஆட்டோவில் மாம்பலத்தில் உள்ள மகா வல்லப கணபதி கோவிலுக்கு சென்று விட்டு மீண்டும் ஆட்டோவில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

பின்னர் தமிழ்செல்வி வீட்டருகே இறங்கி குடியிருப்புக்கு நடந்து சென்று கொண்டிருந்த போது அவரை பின் தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் இரண்டாவது மாடிப்படியில் வைத்து தமிழ்செல்வி அணிந்திருந்த 9 சவரன் தங்க செயினை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுள்ளார்.

உடனே தமிழ்செல்வி தனது மகனுக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் வெளியே சென்ற மகன் ராஜேஷ் விரைந்து வந்து தாயிடம் விசாரித்து விட்டு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தகவலின் பேரில் அசோக் நகர் போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று தமிழ்செல்வியிடம் புகாரை பெற்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவயிடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தப்பி ஓடிய வழிப்பறி கொள்ளையனை தீவிரமாக தேடி வந்தனர்.

பின்னர் போலீஸார் வழிப்பறி சம்பவம் நடந்த இடத்தில் உள்ள செல்போன் டவர் லொக்கேஷனை வைத்து குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டனர்.

அதனை அடுத்து போலீஸார் மூதாட்டியிடம் நகையை பறித்து சென்றதாக ராயபுரம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் @ பர்மா சீனு(50) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது.

மேலும் வழிப்பறி கொள்ளையன் பர்மா சீனுவை பழவந்தாங்கல் போலீஸார் கடந்த 30/10/25 அன்று வழிப்பறி வழக்கில் கைது செய்து புழல் சிறையில் அடைத்தும் கடந்த 6/3/26 அன்று ஜாமினில் வெளியே வந்த சீனு ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்த எண்ணியதும் ஆட்டோவுக்கு தவணை செலுத்த முடியாமல் போனதால் செயின் பறிப்பில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.

பின்னர் பர்மா சீனு மூதாட்டியிடம் பறித்து சென்ற செயினை தனக்கு தெரிந்த மைலாப்பூரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் குமரன் (34) என்பவர் வங்கி கணக்கில் (யூனியன் வங்கி) அடகு வைத்து 5.2 லட்ச பணம் பெற்றது தெரியவந்தது.. மேலும் அடகு வைத்து வந்த பணத்தில் 2 லட்ச ரூபாயை சிறையில் இருந்த போது பழக்கமான கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள ஐஸ் ஹவுஸ் பகுதியை சேர்ந்த ரவுடி பாம்பே சத்யா என்பவரின் கள்ளக்காதலி அனிதாவிடம் கொடுத்தும், அனிதா அந்த பணத்தில் 85 ஆயிரம் ரூபாயை வழக்கறிஞரிடம் கொடுத்ததும் விசாரணையில் தெரியவந்தது.

பின்னர் போலீசார் பர்மா சீனு அளித்த தகவலின் பேரில் ஆட்டோ ஓட்டுநர் குமரன் மற்றும் ரவுடி பாம்பே சத்யாவின் கள்ளக்காதலி அனிதா ஆகியோரையும் கைது செய்து அவரிடம் இருந்து 1.91 லட்ச ரூபாயை பறிமுதல் செய்தனர்.

பின்னர் போலீஸார் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam