Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 21 மார்ச் (ஹி.ச)
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் நடைபெற்று வரும் போர் பதற்றம் குறித்து மத்திய அரசு மவுனம் காப்பதாகவும், அது இந்தியாவின் நாகரிக விழுமியங்களுக்கு எதிரான தார்மிக கோழைத்தனத்தையும், அரசியல் துரோகத்தையுமே பிரதிபலிப்பதாகவும் காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் இன்று வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக ஊடக பதிவில் கூறியிருப்பதாவது,
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது வான்வழித் தாக்குதலைத் தொடங்கி சரியாக 21 நாட்கள் அல்லது மூன்று வாரங்கள் ஆகின்றன. பெரிதும் விளம்பரப்படுத்தப்பட்ட இஸ்ரேல் பயணத்திலிருந்து பிரதமர் மோடி நாடு திரும்பி 23 நாட்கள் ஆகின்றன.
அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது நடத்திய கடுமையான வான்வழித் தாக்குதல், இந்தியா உட்பட எல்லா நாடுகளிலும் கடுமையான பொருளாதார சீர்குலைவுகள் ஏற்பட வழிவகுத்துள்ளது.
இந்த தாக்குதலை மோடி அரசு கண்டித்ததா, விமர்சித்ததா அல்லது கண்டனம் தெரிவித்ததா?
‘இல்லை’ என்பதுதான் பதில்.
அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானிய உயர்மட்டத் தலைவர்களை இலக்கு வைத்து படுகொலைகளை செய்து வருகிறது. இதை மோடி அரசு கண்டித்ததா, விமர்சித்ததா அல்லது கண்டனம் தெரிவித்ததா?
‘இல்லை’ என்பதுதான் பதில்.
ஈரானில் உள்நாட்டுப் போருக்கு வழிவகுக்கக் கூடிய, ஆட்சி மாற்றத்தையும் அரசு வீழ்ச்சியையும் திணிக்கக்கூடிய அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து மேற்கொள்ளும் கொடூரமான முயற்சிகளை மோடி அரசு கண்டித்ததா, விமர்சித்ததா அல்லது கண்டனம் தெரிவித்ததா?
‘இல்லை’ என்பதுதான் பதில்.
ஈரான் மீதான குண்டுவீச்சையும், வளைகுடா நாடுகளில் உள்ள எரிசக்தி மற்றும் பிற அத்தியாவசிய உள்கட்டமைப்புகள் மீதான ஈரானின் தாக்குதல்களையும் உடனடியாக நிறுத்துவதற்கு மோடி அரசு தீவிரமான ராஜதந்திர முயற்சிகளையும் முன்னெடுப்புகளையும் மேற்கொண்டதா? அமெரிக்க அதிபர் மற்றும் இஸ்ரேலிய பிரதமருடன் பெரிதாகப் பேசப்படும் நட்பைப் பயன்படுத்தி, பிரதமர் ஒரு போர் நிறுத்தத்தை ஏற்படுத்தினாரா?
‘இல்லை’ என்பதுதான் பதில்.
இந்த நான்கு 'இல்லை'களும், இந்தியாவின் நாகரிக விழுமியங்களுக்கு எதிரான கோழைத்தனத்தையும் அரசியல் துரோகத்தையுமே பிரதிபலிக்கின்றன.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b