Enter your Email Address to subscribe to our newsletters

தர்மபுரி, 21 மார்ச் (ஹி.ச.)
உலக வனநாளை முன்னிட்டு இன்று (21ம் தேதி) தர்மபுரி மாவட்டம் முழுவதும் வனத்துறை சார்பில் உலக வனநாள் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி வனத்துறை சார்பில் ஆங்காங்கே மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றன.
மேலும் உலக வனநாளையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் 6 லட்சம் மரக்கன்றுகள் நட வனத்துறை முடிவு செய்துள்ளது.
நடப்பாண்டு பள்ளிகளில் அரசு பொதுத்தேர்வு மற்றும் தேர்தல் விதிமுறை அமலில் உள்ளதால், பள்ளி மாணவர்களுடையே மரம் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் கூறியதாவது:
தர்மபுரி மாவட்டத்தில் வனங்களின் பரப்பளவு 1716 சதுர கிலோ மீட்டர். இம்மாவட்டக் காடுகள் கர்நாடகம், தமிழகம் ஆகியவற்றின் எல்லைகள் சந்திக்கும் பகுதியில் அமைந்துள்ளது. தமிழகத்தில் வனப்பரப்பு அதிகம் உள்ள 2வது மாவட்டம் தர்மபுரி. இம்மாவட்டத்தில் 38 சதவீத வனப்பகுதி உள்ளன.
இம்மாவட்டத்தில் காவிரி, தென்பெண்ணை, ஆறு, சனத்குமார நதி, வாணியாறு ஆகிய ஆறுகளுக்கு நீர் பிடிப்புப் பகுதியாகவும் உள்ளன. தர்மபுரி காடுகளில் காணக்கூடிய முக்கிய மரங்கள் தேக்கு, சந்தனம், வேம்பு, அசோகு, புளிய மரம், துரிஞ்சை, ஆல், வேலம், நீலகிரி, எட்டி மரம், நாகமரம், அரசு, வில்வம், வெப்பாலை, மூங்கில், கருங்காலி, புங்கம் ஆகிய மரங்களும் வேளிக்காத்தான், வெடத்தாரை, துளசி, மருதாணி, ஆவாரம், நொச்சி, நச்சட்டன் காரை ஆகிய செடிவகைகளும், காட்டுவள்ளிக் கொடி, கட்டுக்கொடி, சுரட்டைக் கொடி, ஊணாங்கொடி ஆகிய கொடி வகைகளும் காணப்படுகின்றன.
இக்காடுகளில் யானை, சிறுத்தை, காட்டுப் பன்றிகள், கரடி, காட்டெருமை, கடமை, புனுகுப்பூனை, நரி, குரங்கு, கீரிப்பிள்ளை, மான், காட்டுப்பன்றி போன்ற விலங்குகளும், கிளி, குயில், புறா, காடை, கௌதாரி, மயில், காட்டுக் கோழி, பெருங்கழுகு, பருந்து உள்ளிட்ட பறவைகளும், மலைப்பாம்பு, விரியன், நாகப்பாம்பு, பச்சைப் பாம்பு, சாரைப்பாம்பு, ஓணான், தேரை, தேள், பச்சோந்தி, மரவட்டை, காட்டுப்பூரான் உள்ளிட்ட ஊர்வனவும் காணப்படுகின்றன.
தர்மபுரி மாவட்டத்தில் வனப்பரப்பை அதிகரிக்கவும், வனப்பரப்பை அதிகரிக்கவும் உலக வனநாளையொட்டி 6 லட்சம் மரக்கன்றுகள் வனத்துறை மூலம் நடப்பட உள்ளது. இந்த பணி வரும் ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நடைபெறவுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b