தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் எந்தவித குழப்பமும் இல்லை - டி.டி.வி தினகரன் விளக்கம்
சென்னை, 22 மார்ச் (ஹி.ச.) சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தே.ஜ. கூட்டணியில் உள்ள அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது தொகுதிப் பங்கீடு தொடர்பாக
TTV Dhinakaran


சென்னை, 22 மார்ச் (ஹி.ச.)

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தே.ஜ. கூட்டணியில் உள்ள அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அப்போது தொகுதிப் பங்கீடு தொடர்பாக டி.டி.வி. தினகரன் அமித்ஷாவிடம் பேசியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், டெல்லியில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போதுபேசிய அவர்,

மத்திய உள்துறை அமைச்சரையும், தமிழ்நாடு மாநிலத் தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலையும் சந்தித்து விட்டு வந்துள்ளோம்.

ஏப்ரல் 23ஆம் தேதி நடக்கவுள்ள தேர்தலுக்கு, 234 தொகுதிகளில் உள்ள ஒவ்வொரு பூத்திலும் எங்களது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.

மேலும், மகாராஷ்டிரா, டெல்லி, ஹரியானா, பிகார் போன்ற மாநிலங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி எப்படி ஒற்றுமையாக, பூத் வாரியாகத் தேர்தல் பணியாற்றி மாபெரும் வெற்றியை பெற்றார்களோ, அதேபோல தமிழ்நாட்டிலும் வெற்றி பெறுவது சம்பந்தமான ஆலோசனைகளை உள்துறை அமைச்சரும், பியூஷ் கோயலும் எங்களோடு பகிர்ந்து கொண்டனர்.

சொல்லப்போனால், நான் சென்ற வாரமே அவர்களை சந்திக்க வேண்டியது. அவர்களுடைய வேலைப்பளு காரணமாகவே சந்திப்பு தள்ளிப்போனது. நேற்று வரச் சொல்லியிருந்தார். நேற்றிரவும் அவருக்குப் பணி நெருக்கடி இருந்ததால் இன்று காலை சந்தித்துப் பேசினேன்.

தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் சென்னையில் சுமுகமாக நடைபெற்று வருகின்றன. இன்னும் இரண்டு மூன்று நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும் என்றார்.

அமமுகவுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் கேள்விக்கு பதிலளித்த அவர்,

ஊடகங்களில் 6, 7, 8 எனப் பல எண்களைக் கூறி வருகிறீர்கள். அமமுகவிற்கு இடங்கள் ஒதுக்குவதில் தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் எந்தவித குழப்பமும் இல்லை.

நீங்கள்தான் மிகவும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறீர்கள். முடிவு என்ன என்பதை நீங்களே பார்க்கப் போகிறீர்கள் என்றார்.

எடப்பாடி பழனிசாமியை அடுத்து தற்போது நீங்கள் என டெல்லிக்கு ஒவ்வொரு நபராக சென்று வருவதற்கு என்ன காரணம் என்ற கேள்விக்கு,

நாங்கள் ஒவ்வொருவராகப் போகவில்லை. நான் ஏற்கனவே சொன்னது போல, கடந்த வாரமே திட்டமிடப்பட்ட சந்திப்புதான் இது.

நான் டெல்லிக்கு சென்றாலே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயப்படுகிறார். அது ஏன் என்று உங்களுக்கே தெரியும்.

பியூஷ் கோயல் போன்ற அமைச்சர்கள் தினமும் இங்கே வந்து தொகுதிப் பங்கீடு பற்றிப் பேச முடியாது. எனவே, அவர் ஓரிரு நாட்களில் சென்னை வர வாய்ப்புள்ளது.

அனைத்தும் சுமுகமாக நடக்கிறது. மக்களின் ஆதரவோடு, மக்கள் விரோத திமுக ஆட்சியை உறுதியாக அகற்றுவோம் என கூறினார்.

Hindusthan Samachar / ANANDHAN