கொலையான விவசாயி மகள் தூக்கிட்டு தற்கொலை - தந்தை இறந்த விரக்தியில் சோக முடிவு
நெல்லை, 22 மார்ச் (ஹி.ச.) நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள பருத்திப்பாட்டை அடுத்த வடக்கு நெல்லையப்பபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (விவசாயி). கடந்த 17-ந்தேதி காலையில் ஆறுமுகம் வயலுக்கு சென்றபோது, ஒரு கும்பலால் சரமாரியாக வெட்டிக்கொலை ச
Death


நெல்லை, 22 மார்ச் (ஹி.ச.)

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள பருத்திப்பாட்டை அடுத்த வடக்கு நெல்லையப்பபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (விவசாயி).

கடந்த 17-ந்தேதி காலையில் ஆறுமுகம் வயலுக்கு சென்றபோது, ஒரு கும்பலால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த பயங்கர சம்பவம் நடந்து 6 நாட்கள் ஆகியும் இதுவரை கொலையாளிகள் கைது செய்யப்படவில்லை. இதனால் ஆறுமுகம் உடலை வாங்க அவரது உறவினர்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தந்தை இறந்த துக்கம் தாளாமல், அவரது மகள் பேபி கனி (வயது 23) கடந்த சில நாட்களாக அழுது கொண்டே இருந்தார். அவருக்கு உறவினர்கள் எவ்வளவோ சமாதானம் சொல்லிய நிலையில் அவர் வெறுப்பாகவே காணப்பட்டார்.

இன்று காலையில் வீட்டில் தனது அறைக்கு சென்ற பேபி கனி, திடீரென கதவை அடைத்துக்கொண்டு தூக்குப் போட்டு கொண்டார்.

இதனை அவரது உறவினர்கள் பார்த்து கத்தி கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கதவை உடைத்து அவரை மீட்டனர்.

மயங்கிய நிலையில் இருந்த அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

பேபி கனி நர்சிங் படித்து முடித்துவிட்டு தொகுப்பூதிய அடிப்படையில் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரிந்து வந்தது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் குறித்து மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆறுமுகம் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கொலையாளிகளை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுக்காமல், ஆறுமுகத்தின் குடும்பத்தினரை மீண்டும் மீண்டும் விசாரணை என்ற பெயரில் தொல்லை கொடுத்து வந்ததால் அந்த விரக்தியில் பேபி கனி தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN