Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 22 மார்ச் (ஹி.ச.)
இந்தியாவின் மிக முக்கிய துறைமுகங்களுள் ஒன்றான வ.உ.சிதம்பரனார் துறைமுகம் அமைந்துள்ள தூத்துக்குடி தொகுதியானது முத்துநகர் என அறியப்படுகிறது.
மீன்பிடி துறைமுகத்திற்கு அடுத்த படியாக அரசு மற்றும் தனியார் அனல் மின் நிலையங்கள் ஏராளமாக உள்ளன. இங்கு விரைவில் கப்பல்கட்டும் தளம் அமைய உள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில், 52 வார்டுகள் தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் அடங்கும். தூத்துக்குடி தொகுதியில் 1,20,614 ஆண்கள், 1,27,623 பெண்கள், 63 இதரர் என மொத்தம் 2,48,300 வாக்காளர்கள் உள்ளனர்.
மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் அதிகபட்சமாக தூத்துக்குடி தொகுதியில் 2,48,300 வாக்காளர்கள் உள்ளனர்.
தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில், 1952 முதல் இதுவரை
நடைபெற்ற தேர்தல்களில் திமுக 7 முறையும், அதிமுக 6 முறையும், காங்கிரஸ் 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
இத்தொகுதியில் வெற்றி பெற்ற எஸ்.என்.ராஜேந்திரன், பி.கீதா ஜீவன், சி.த.செல்லப்பாண்டியன் ஆகியோர் அமைச்சர்களாக பொறுப்பு வகித்தவர்கள்.
தற்போதைய மகளிர் நலத்துறை அமைச்சர் கீதா ஜீவனின் தந்தை பெரியசாமி அவரது சீட்டை 2006-இல் மகளுக்கு ஒப்படைத்தார்.
அப்போது சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றி பெற்ற அவர், 2006–2011 காலகட்டத்தில் அமைச்சராக பணியாற்றினார்.
2016, 2021-இல் தொடர்ந்து வெற்றி பெற்று மூன்றாம் முறையாக ‘ஹெட்ரிக்’ வெற்றியை நோக்கி கீதாஜீவன் காய்நகர்த்தி வருகிறார்.
கீதா ஜீவனுக்கு போட்டியாக உடன் பிறந்த தம்பி தூத்துக்குடி மேயர் ஜெகனும் திமுக நேர்காணலில் விருப்ப மனு அளித்துள்ளார்.
சமீபத்தில் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திமுக சார்பில் மீனவர் சமுதாயத்தை சேர்ந்த கான்ஸ்டைன் ரவீந்திரன் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து மற்ற அரசியல் கட்சியினரும் மீனவர் சமுதாயத்தின் வாக்குகளை பெறுவதற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.
இதற்கிடையே தமிழக வெற்றி கழகம் சார்பில்தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட அக்கட்சி தலைவர் விஜய் தனது நண்பரும், நகைச்சுவை நடிகரும், இயக்குநருமான ஸ்ரீநாத்தை நிறுத்துவதற்கு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அ.தி.மு.க சார்பில் போட்டியிட முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க மாநில வர்த்தக அணி செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன் கடுமையாக முயற்சி செய்து வருகிறார்.
மதச்சிறுபான்மை வாக்குகள் அதிகம்:
கடந்த 2006இல் முதன்முறையாக சட்டப்பேரவைத் தேர்தலை சந்தித்த பி.கீதா ஜீவன் வெற்றிபெற்று தமிழக அமைச்சரவைவில் இடம்பிடித்தார்.
2011இல் தோல்வியடைந்த அவர், பின்னர் 2016, 2021ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்று, தற்போது மாநில சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சராக செயல்பட்டு வருகிறார்.
நாடார் சமூகத்தினர் பெரும்பான்மையாக உள்ள இத்தொகுதியில், மீனவர், பட்டியலினத்தவர், வேளாளர் கணிசமான எண்ணிக்கையிலும், இதர சமூகத்தினர் பரவலாகவும் உள்ளனர்.
இத்தொகுதி மத ரீதியிலான சிறுபான்மையினர் வாக்குகள் அதிகம் உள்ள தொகுதியாகும்.
முக்கிய பிரச்னைகள்:
தூத்துக்குடியின் முக்கிய பிரச்னை போக்குவரத்து நெரிசல்தான்.
நகரின் உள்பகுதியிலேயே அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள், பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்டவை இருப்பதால் அனைத்து வகையிலான வாகனங்களின் வரத்தும் நகருக்குள் அதிகளவில் இருக்கும்.
தினந்தோறும் ஆயிரக்கணக்கில் வாகனங்கள் வந்து செல்வதால் போக்குவரத்து நெரிசல் கடுமையாக ஏற்படுகிறது.
குறிப்பாக விவிடி சிக்னல் பகுதி, காய்கனி மார்க்கெட் பகுதியில் உள்ள சிக்னல்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அரசு மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ்கள் பல நேரங்களில் பாதிக்கப்படுகின்றன.
மழைக்காலங்களில் பல இடங்களில் மழைநீர் தேங்கி நிற்பது அடுத்த முக்கிய பிரச்னையாகும்.
முந்தைய காலங்களைவிட தற்போது பராமரிப்பு பணிகள் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், ஓரிரு நாள்களில் மழைநீர் வடிந்து விடுகிறது.
இருப்பினும் சில பகுதிகளில் வாரக் கணக்கில், மாதக்கணக்கில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அப்பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் சீராக வடிய வைக்க வேண்டியது அவசியமாகும்.
போக்குவரத்து நெரிசலுக்கு மேம்பாலங்களே தீர்வு:
போக்குவரத்து நெரிசலை போக்க, விவிடி சிக்னல் பகுதியில்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தபடி, மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது இதற்கு முக்கிய தீர்வாக அமையும்.
இதேபோன்று ரயில்வே 4ஆம் கேட், 2ஆம் கேட், 1ஆம் கேட் பகுதிகளில், கேட் அடிக்கடி மூடப்படுவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், 4ஆம் கேட் மற்றும் புதிதாக 5ஆம் கேட் விஎம்எஸ் நகர் தெற்கு நிகிலேசன் நகர் பகுதியில் அமைத்து இரு இடங்களிலும் மேம்பாலம் அமைத்தால் போக்குவரத்து நெரிசல் குறையும் வாய்ப்பு உள்ளது.
பொதுமக்களின் கோரிக்கைகள்:
ரயில் நிலையத்தை மீளவிட்டானுக்கு மாற்றலாம்.இதனால் நகரில் வாகன நெரிசல் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண முடியும். ரயில் நிலையம் மாற்றப்படும் போது, தற்போது நகரின் மையத்தில் உள்ள தண்டவாளங்கள் அகற்றப்பட்டு, அதில் நான்குவழிச் சாலை அமைக்கும் அளவுக்கு தாராளமாக இட வசதி கிடைக்கும்.
இதனால் நகரில் போக்குவரத்து நெரிசல் குறைவதோடு, மீளவிட்டான் மற்றும் சின்னக்கண்ணுபுரம் பகுதியும் நல்ல வளர்ச்சி அடையும் என ஒரு சாரார் கருத்து தெரிவிக்கின்றனர்.
மேலும், பல்வேறு பெரிய நகரங்கள் எல்லாம் வளர்ச்சியுறுவதற்கு முக்கிய காரணமான இருப்பது பேருந்து நிலையம் உள்ளிட்டவை ஊருக்கு வெளியில் இருப்பதால் தான்.
இதே போன்று தூத்துக்குடியிலும் அமைத்தால் ஊர் மேலும் வளர்ச்சி பெறும் என சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
அதன்படி, புறவழிச்சாலை பகுதியில் புகர் பேருந்து நிலையம், ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் அமைத்து, தற்போது உள்ள பேருந்து நிலையத்தை நகரப் பேருந்து நிலையமாக மாற்றி அமைத்தாலே ஊரின் வளர்ச்சியும் விரிவடையும். பாக்குவரத்து நெரிசலையும் கணிசமாக குறைக்க முடியும்.
அதிகரிக்கும் எதிர்பார்ப்புகள்:
தூத்துக்குடியில் நவீன, உயர் மருத்துவ சிகிச்சை பெறும் வகையில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் இல்லை என்ற குறைபாடு உள்ளது.
.இங்குள்ளோர் உயர் மருத்துவ சிகிச்சைக்கு திருநெல்வேலி அல்லது மதுரைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
எனவே அரசு பல்நோக்கு மருத்துவமனையை அனைத்து தரப்பினரும் உயர் மருத்துவ சிகிச்சை பெறும் வகையில் போதிய கட்டமைப்பு வசதிகள், மருத்துவர்களை நியமித்து, நவீன, உயர் மருத்துவ சிகிச்சை பெற வழிகள் ஏற்படுத்த வேண்டும்.
தூத்துக்குடியின் தொழில் வளர்ச்சியில் துறைமுகம், விமான நிலையத்துக்கு முக்கிய பங்கு உண்டு. எனவே, இந்த விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதோடு, சரக்குகளை கையாளும் விமான நிலையமாகவும் மாற்ற வேண்டும். அனைத்து முக்கிய நகரங்களுக்கும் நேரடி விமான சேவை ஏற்படுத்த வேண்டும்.
துறைமுகம் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்றுமதி சார்ந்த சிறு தொழில்கள் தொடங்க ஊக்குவிக்க வேண்டும். தூத்துக்குடியில் சில ஆலைகள் மூடப்பட்டுள்ளதால் வேலை இழப்புகள், பல்வேறு கிளைத் தொழில்கள் நசிந்துள்ளன.
எனவே, சட்ட திட்டங்களுக்கு உள்பட்டு, மூடப்பட்ட பல்வேறு ஆலைகளை திறப்பதோடு, புதிய ஆலைகளையும் நிறுவ வேண்டும்.
கடல் ஆம்புலன்ஸ் சேவை:
புயல், வெள்ளம், ராட்சத அலைகள், கடலரிப்பு போன்றவற்றால் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும். முக்கியமாக ஆபத்தான நேரங்களில் உதவும் வகையில் கடல் ஆம்புலன்ஸ் ஏற்படுத்த வேண்டும். ஜிபிஎஸ், ரேடார், சிக்னல் சாதனங்கள் இலவசமாக வழங்க வேண்டும். மீன்பிடி துறைமுகங்கள் நவீனமயமாக்க வேண்டும். திரேஸ்புரத்தில் தூண்டில் பாலம் முழுமையாக அமைக்க வேண்டும்.
சட்டக் கல்லூரி தேவை:
தூத்துக்குடியில் பல ஆண்டுகளாக அரசு இடங்களில் குடியிருந்து வருவோருக்கு பட்டா வழங்க வேண்டும். தூத்துக்குடியில் சட்டக் கல்லூரி, அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்கப்பட வேண்டும். அரசு சார்பில் குளிர்பதன கிடங்கு அமைத்தல் அவசியம். பெரிய தொழில் நகரம் என்பதால், இங்குள்ள சங்கரபேரியில் லாரி நிறுத்துமிடம் அமைக்க வேண்டும்.
உப்பு உற்பத்திக்கு முக்கியத்துவம்:
உப்பு உற்பத்தியாளர்களை பொருத்தளவில் கோடைக்காலங்களில் திடீர் மழையால் உப்பளம் மற்றும் உப்பு உற்பத்தி பாதிக்கப்படும்போது, அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். குஜராத் உப்பு இங்கு விற்கப்படும் நிலையில், உள்ளூர் உப்பு விற்பனை, விலை பாதிக்காமல் இருக்க உறுதி செய்ய வேண்டும்.
தூத்துக்குடியில் தொழில் வளர்ச்சியை மேலும் மேம்படுத்த வேண்டும் என்பதே தொகுதி மக்களின் அதிகபட்ச எதிர்பார்ப்பாகும்.
Hindusthan Samachar / vidya.b