Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 22 மார்ச் (ஹி.ச.)
தூத்துக்குடி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் புதூர் பாண்டியாபுரம் அருகே சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இந்த சுங்கச்சாவடியில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்துச் செல்கின்றனர்.
இந்த சுங்கச்சாவடியில் ஏராளமான பெண் ஊழியர்கள் பில்லிங் போடுவது மற்றும் தூய்மைப் பணி உள்பட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சுங்கச்சாவடியில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 58 வயதான அவதேஷ் சிங் என்பவர் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார்.
இந்தநிலையில், அவதேஷ் சிங் சுங்கச்சாவடியில் பணிபுரிந்து வரும் பெண்கள் சிலருக்கு வாட்ஸ் அப் மூலம் பாலியல் தொந்தரவுக் கொடுத்ததாக அங்கு பணிபுரிந்த பெண்கள், புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் சுங்கச்சாவடி மேலாளர் அவதேஷ் சிங்கை விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
இதில் அவர் பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொந்தரவுக் கொடுத்தது ஊர்ஜிதம் செய்யப்பட்டதால் சுங்கச்சாவடி மேலாளர் அவதேஷ் சிங் மீது அனைத்து மகளிர் காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட சுங்கச்சாவடி மேலாளர் அவதேஷ் சிங், தூத்துக்குடி மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்ற எண் 3-ல் நீதிபதி விஜயராஜ்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே, சம்மந்தப்பட்ட மேலாளர் மீது தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகளும் துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுங்கச்சாவடியில் பணிபுரிந்து வரும் பெண் ஊழியர்களுக்கு சக உயர் அதிகாரியே பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN