Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 22 மார்ச் (ஹி.ச.)
திருவண்ணாமலை அடுத்த வேங்கிகால் பகுதியில் உள்ள இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் சத்தியநாராயணன் (வயது 45), கூலித் தொழிலாளி. இவரது மனைவி நாகமணி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
இவர்கள் கடந்த 2020 ஆம் ஆண்டு சொந்த ஊரான ஆந்திரா மாநிலத்தில் இருந்து திருவண்ணாமலை மாநகரில் உள்ள இந்திரா நகரில் வந்து குடியேறி வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இரவு வீட்டில் இருந்து வெளியே சென்றிருந்த சத்தியநாராயணனின் மனைவி நாகமணி இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டு இருந்து உள்ளது.
சத்தியநாராயணன் கதவை பூட்டிவிட்டு வெளியே சென்று இருக்கலாம் என்று நினைத்த அவர் பூட்டின் சாவி இல்லாததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார்.
அப்போது வீட்டிற்குள் சத்தியநாராயணன் முகம் சிதைந்த நிலையில் கல்லால் அடிக்கப்பட்டு படுகாயமடைந்து உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். இதை கண்டு நாகமணி அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து உடனடியாக திருவண்ணாமலை கிராமிய காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார், தகவலின் பேரில் திருவண்ணாமலை உதவி காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார், கிராமிய காவல் ஆய்வாளர் ஹேமாவதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
பின்னர் சடலத்தை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலையில் வீட்டிற்குள் மர்மமான முறையில் கூலித் தொழிலாளி கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் அனுதினமும் பல்வேறு வெளிமாநில நபர்கள் திருவண்ணாமலைக்கு வருவது வாடிக்கையாக இருந்த வண்ணம் இருந்து வருகிறது. இதனை கண்காணிக்க வேண்டிய காவல்துறையினர் எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் மெத்தன போக்குடன் இருந்து வருகின்றனர்.
ஆன்மீக நகரமான திருவண்ணாமலையில் அனுதினமும் பல்வேறு குற்ற சம்பவங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், அதனை மறைக்க முற்படும் திருவண்ணாமலை மாவட்ட காவல் துறையினர் இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN