Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 மார்ச் (ஹி.ச.)
சென்னை தி.நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடிகர் சரத்குமார், இன்று தன் ஆதரவாளர்களுடன், அவசர ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சரத்குமார் கூறியதாவது:
எக்ஸ் தளத்தில் நான் பதிவிட்டதை வைத்து பல தகவல்கள் பரவி வருகின்றன.
30 ஆண்டுகள் என்னோடு பயணித்தவர்கள் இன்று வருகை தந்து ஆதங்கத்தை பதிவிட்டுள்ளனர்.
பாஜகவில் எனக்கு எந்த பொறுப்பும் வழங்கவில்லை என ஆதரவாளர்கள் ஆதங்கத்தை கூறினர்.
என்னோடு இருந்தவர்களில் 19 பேருக்கு பாஜகவில் மாநில நிர்வாகிகளாக பதவி கொடுத்துள்ளனர்.
எனக்கு பொறுப்பு கொடுக்காமல் என்னோடு இருந்தவர்களுக்கு பொறுப்பு கொடுத்து என்ன பயன் என அவர்கள் என்னிடம் கேட்கின்றனர்.
சமத்துவ மக்கள் கட்சியை மீண்டும் தொடங்கலாம் என பலர் இன்று கூறினர்.
எனக்கு பொறுப்பு வழங்குவது குறித்து நாளை பாஜக மாநில தேசிய தலைவர்களுக்கு கடிதம் கொடுக்க உள்ளேன்.
வெறும் காரிய கர்த்தாவாகவே நான் எல்லா இடத்திலும் சென்று பேச முடியாது.
கட்சியில் உரிய பொறுப்பு இல்லை என்ற ஆதங்கம் எனக்கும் உண்டு.
தேசிய ஜனநாயக கூட்டணி மேடையில் எனது படம் கூட இடம் பெறவில்லை என ஆதரவாளர்கள் ஆதங்கப்பட்டனர்.
பொறுப்பு இருந்தால் தான் கட்சியில் செயல்பட முடியும்.
ஒரு உறுப்பினராக என்னால் செயல்பட முடியாது.
இதனை ஆதங்கமாக சொல்கிறேன்.
அண்ணாமலை மாநில தலைவராக இருக்கும்போது எனக்கு கொடுத்த உத்தரவாதம் என்ன என்பது அவர்களுக்கு தெரியும்.
கட்சியில் பொறுப்பு இருந்தால் தன் வேலை செய்ய முடியும் .
கார் ஓட்ட லைசென்ஸ் உள்ள ஒருவரை கார் ஓட்டக் கூடாது என கூறுவது போல் எனக்கு பொறுப்பு வழங்காமல் உள்ளனர்.
பாஜக தலைமையிடம் எனக்கு பொறுப்பு வழங்க வேண்டும் என பலமுறை வலியுறுத்தி விட்டேன்.
15 நாளாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.
தேசிய தலைவர் நியமனம் செய்யப்படாமல் இருந்ததால் எனக்கு பதவி வழங்குவது தள்ளிப்போனதாக கூறினார்கள்.
இப்போது பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது பற்றி கூறியுள்ளனர்.
எனக்கு தேசியளவில் பொறுப்பு வழங்க வேண்டும்.
கண்டிப்பாக என் கோரிக்கைக்கு செவி சாய்த்தே ஆக வேண்டும்
தற்போது மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குவது குறித்த எண்ணமே எனக்கு இல்லை.
தேசியப் பொறுப்பு எனக்கு வழங்கப்படும் என்று கூறி தான் என்னை கட்சியில் இணைத்தனர்.
நான் பாஜகவின் மாநில தலைவராக இருந்திருந்தால் முதலில் பொறுப்பை உறுதி செய்து விட்டு தான் கட்சியில் புதியவர்களை இணைத்திருப்பேன்.
ஆனால் ஒருவரை கட்சியில் சேர்த்து விட்டு பிறகு தொடர்ந்து பொறுப்புக்காக காக்க வைப்பது தவறு.
எத்தனை இடங்களில் போட்டி என தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் முடிவு செய்யாமல் உள்ளனர்
அண்ணாமலை சொல்லி நான் பாஜகவில் இணையவில்லை.
பிரதமர் மீதான விருப்பத்தால் பா.ஜ.க-வில் இணைந்தேன்.
பொறுப்பு இல்லாமல் நான் என்னவென்று சொல்லி கட்சி வேலை பார்ப்பது.
7 -வது முறையாக கூறுகிறேன் இந்த தேர்தலில் நானோ என் மனைவியோ போட்டியிட மாட்டோம்.
என் மனைவி லேடி சூப்பர் ஸ்டாராக மாறி விட்டார், இதனால் நயன்தாராவின் பதவி போய் விட்டதா என சர்ச்சை எழுப்பி விட வேண்டாம்.
தாய்க்கிழவி போன்ற படங்கள் மூலம் அவரது கலையுலக பயணம் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது .
தி.மு.க-வில் இணைவது குறித்து அரசியல் ரீதியாக நான் யாரிடமும் பேசவில்லை.
தலைமை கூறினாலும் நான் இந்த முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன்.
அ.தி.மு.க-வை பாஜக கபளீகரம் செய்யுமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
கட்சியில் பொறுப்பு இல்லை என எனக்கு இருப்பது அதிருப்தியல்ல....ஆதங்கம்.
எடப்பாடி பழனிசாமி பெயரை பிரதமர் கூறவில்லை என்றால் அதை பிரதமரிடம் தான் கேட்க வேண்டும்.
நல்ல தலைவர்களை மக்கள் பதவிக்கு கொண்டுவர வேண்டும்.
தற்குறிகளை தேர்வு செய்யக் கூடாது.
பொறுப்பு இல்லாததால் எனக்கு சோர்வு ஏற்பட்டதால் தான் இந்த சந்திப்பையே மேற்கொண்டேன்.
1996 -பிரசாரம் போல இந்த முறை சிறப்பான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவேன்.
நான் கிணற்றில் குதி என்றால் குதித்து விடுவார்கள் அப்படிப்பட்டவர்கள் என்னுடன் இருக்கின்றனர்.
கட்சியை பா.ஜ.க-வில் இணைக்காமலே இருந்திருக்கலாம் என்ற எண்ணம் என் ஆதரவாளர்களுக்கு இப்போது ஏற்பட்டிருக்க கூடும்.
விஜய் ஒரு தலைவரே இல்லை என நான் ஆதரவாளர்களிடம் இன்று பேசும் போது கூறியது ஏன் என கேட்கிறீர்கள்,
கரூரில் இறந்த 41 பேரை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து அவர் துக்கம் விசாரித்து இருக்கவே கூடாது.
அது ஒன்றே போதும் அவர் ஒரு தலைவரே இல்லை என்பதற்கு.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b