தி.மு.க கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி விலகல் - வேல்முருகன் அறிவிப்பு
சென்னை, 22 மார்ச் (ஹி.ச) தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ஆம் தேதி (23.04.2026) தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகச் சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. அதன் ஒரு
ஹி.ச


சென்னை, 22 மார்ச் (ஹி.ச)

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ஆம் தேதி (23.04.2026) தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகச் சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது.

அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சிகள் கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

கூட்டணி தொடர்பாகத் தமிழக வாழ்வுரிமை கட்சி ஏற்கனவே தி.மு.கவுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியிருந்தது.

அப்போது கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு அக்கட்சியின் உயர்மட்ட குழுவின் ஆலோசனைக் கூட்டமானது சென்னையில் நடைபெற்றது.

அந்த கூட்டத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் கூடுதல் இடங்களை ஒதுக்க வேண்டும் என்று வேல்முருகன் தெரிவித்திருந்தார்.

இல்லை என்றால் கூட்டணியை விட்டு வெளியேறுவோம் எனவும் தெரிவித்திருந்தார்.

இருப்பினும் தி.மு.க.விடமிருந்து கூடுதல் இடங்களை ஒதுக்குவதாக எந்த பதிலும் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் திமுக கூட்டணியில் வெளியேறுவதாகவும், தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பாகத் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியானது.

அதோடு அக்கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலையும் வேல்முருகன் வெளியிட உள்ளதாகக் கூறப்பட்டது.

இத்தகைய சூழலில் தான் தொடர்ந்து தி.மு.க. கூட்டணியில் நீடிப்பதா? அல்லது கூட்டணியில் இருந்து வெளியேறித் தனித்துப் போட்டியிடுவதா? என்ற முடிவை வேல்முருகன் இன்று (22.03.2026) அறிவிக்க உள்ளார் எனத் தகவல் வெளியாகியிருந்தது.

அதன்படி சென்னை விருகம்பாக்கத்தில் வேல் முருகன் இன்று செய்தியாளார்களைச் சந்தித்து பேசினார்.

செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது,

2019, 2021, 2024 மற்றும் உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் பயணித்தோம்.

இம்முறை திமுகவிடம் தவாக 2 தொகுதிகளை கேட்டது. ஒரு தொகுதி தருவதாக கூறினார்கள்.

கூடுதல் இடம் தருமாறு கேட்டோம். அத்துடன், தங்களது 10 கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கோரினோம்.

சட்டமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தோம். சட்டமன்றத்தில் ஒற்றை ஆளாய் போராடினேன்.

ஆனால், நாங்கள் வைத்த எந்த கோரிக்கைகளையும் திமுக நிறைவேற்றவில்லை. திமுக எங்களை புறக்கணித்துவிட்டது.

திமுக கூட்டணியில் இருந்து என்னை வெளியேற்ற அதிகாரிகள் அறிவுரை கூறியுள்ளனர்.

அதிகாரிகளின் பேச்சை கேட்டு தவாகவை திமுக புறக்கணித்துள்ளது. தமிழகத்தில் அதிகாரிகளின் ஆட்சிதான் நடக்கிறது.

கூட்டணி கட்சி தலைவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இன்று முதல் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து விலகுகிறது. அதிமுக - பாஜக கூட்டணியில் சேர மாட்டோம். இடங்களுக்காக கூட்டணியில் இருந்து விலகவில்லை.

எங்களது 10 கோரிக்கைகளே முக்கியம். நான் வைத்துள்ள 10 கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடன் பேசி வருகிறோம்.

ஆதரவு இயக்கங்களுடன் கலந்தாலோசித்து கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b