அருணை நர்சிங் கல்லூரி மாணவிகளுக்கு கோர்ஸ் கம்ப்ளீஷன் சான்றிதழ் வழங்க மறுப்பு!
திருவண்ணாமலை, 23 மார்ச் (ஹி.ச.) திருவண்ணாமலை அடுத்த தென்மாத்தூர் கிராமத்தில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் மனைவி சங்கரி வேலுவுக்கு சொந்தமான சொந்தமான அருணை நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. அத்துடன் அருணை மருத்துவ
Arunai Medical College


திருவண்ணாமலை, 23 மார்ச் (ஹி.ச.)

திருவண்ணாமலை அடுத்த தென்மாத்தூர் கிராமத்தில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் மனைவி சங்கரி வேலுவுக்கு சொந்தமான சொந்தமான அருணை நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது.

அத்துடன் அருணை மருத்துவக் கல்லூரி, அருணை பொறியியல் கல்லூரி, கம்பன் மகளிர் கலை கல்லூரி, கரண் கலைக்கல்லூரி, ஜீவா வேலு மெட்ரிக் பள்ளி, குமரன் பாலிடெக்னிக் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.

இந்தக் கல்லூரிகளில் பல்லாயிரக்கணக்கான மாணவ மாணவிகள் எல்கேஜி முதல் பட்டப் படிப்பு வரை பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் அருணை நர்சிங் கல்லூரியில் நர்சிங் பட்டப்படிப்பு முடித்துவிட்டு டிகிரி முடித்ததற்கான கோர்ஸ் கம்ப்ளீசன் சர்டிபிகேட் கல்லூரி நிர்வாகம் வழங்க மறுப்பதாக கூறி 60 க்கும் மேற்பட்ட நர்சிங் படிப்பு முடித்த மாணவிகள் தங்கள் பெற்றோருடன் கல்லூரியை முற்றுகையிட்டு, கல்லூரி நிர்வாகத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே கோர்ஸ் கம்ப்ளீஷன் சர்டிபிகேட் கேட்டபோது வாரக்கணக்கில் இழுத்தடித்த கல்லூரி நிர்வாகம், பின்னர் தங்களது பெற்றோரை அழைத்து வரும்படி கூறியுள்ளனர்.

பின்னர் இன்று தங்கள் பெற்றோருடன் வந்து கோர்ஸ் கம்ப்லீஷன் சர்டிபிகேட் கேட்ட நிலையில் அனைத்து சான்றிதழ்களும் ஹெச்.ஆர் டிபார்ட்மெண்டுக்கு வழங்கப்பட்டுள்ளது.

நீங்கள் அங்கு சென்று முறையிடுங்கள் என்று கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் கூறுவதால் மாணவிகள் ஆத்திரமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாங்கள் கல்லூரியில் தான் படித்தோம், நாங்கள் ஏன் எங்கள் சான்றிதழ்களை பெறுவதற்கு எச்.ஆர் டிபார்ட்மெண்ட்க்கு செல்ல வேண்டும், கல்லூரி கட்டணம் ஒரு நாள் செலுத்தவில்லை என்றாலும் எங்களுக்கு கல்லூரியில் பாடத்தை கவனிக்க அனுமதிக்க மாட்டார்கள், எங்கள் பெற்றோர்கள் வந்தால் கூட ஒருபோதும் அனுமதிக்காத இவர்கள் கல்லூரி கட்டணம் செலுத்துவதற்கு மட்டுமே அனுமதிப்பார்கள், அப்படிப்பட்ட நிலையில் இப்போது எங்கள் பெற்றோரை அவர்கள் ஏன் அழைக்க வேண்டும், நாங்கள் எச்.ஆர் டிபார்ட்மெண்டிடம் சென்று கேட்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை, நாங்கள் கல்லூரி நிர்வாகத்தை தான் கேட்போம் என்று மிகுந்த ஆக்ரோஷத்துடன், பொங்கி எழுந்து கல்லூரி நிர்வாகத்தினரிடம் கல்லூரி மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தங்களுக்கு சான்றிதழ் வழங்கினால் மட்டுமே இந்த கல்லூரி வளாகத்தை விட்டு வெளியேறுவோம், இல்லாதபட்சத்தில் நாங்கள் இந்த கல்லூரி வளாகத்திலேயே இரவு முழுவதும் கூட இங்கேயே தங்கி இருந்து நாங்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று மாணவிகள் வெகுண்டு எழுந்து ஆக்ரோஷத்துடன் ஆவேசமாக தெரிவித்து வருகின்றனர்.

மற்ற கல்லூரிகளில் தங்களுடன் படித்து முடித்த மாணவிகள் அனைத்து சான்றிதழ்களையும் பெற்றுவிட்ட நிலையில் அருணை நர்சிங் கல்லூரியில் கோர்ஸ் கம்ப்ளீஷன் சர்டிபிகேட் வழங்க மறுப்பது அராஜகப் போக்கு என்று மாணவிகள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.

அருணை மருத்துவக் கல்லூரியில் எங்களை கட்டாயப்படுத்தி குறைந்த சம்பளத்தில் பணியாற்ற வேண்டும் என்று நிர்பந்தம் செய்வது எந்த விதத்தில் நியாயம் ? எங்களுடைய உரிமை, எங்கள் தேவைக்கு ஏற்ப நாங்கள் எங்கு வேண்டுமானாலும் சென்று பணியாற்றுவோம், அதற்கு இந்த கல்லூரி நிர்வாகம் தடை போடும் வகையில் எங்களுடைய சான்றிதழ் வழங்க மறுப்பது சட்டத்துக்கு புறம்பானது, எனவே நாங்கள் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்திடம் இது சம்பந்தமாக புகார் அளித்து முறையிட உள்ளோம் என்று மாணவிகள் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / ANANDHAN