சென்னை விமான நிலையத்தில் ஒருங்கிணைந்த 2-வது முனையத்தை டிசம்பர் மாதத்திற்குள் திறக்க முடிவு
சென்னை, 23 மார்ச் (ஹி.ச.) சென்னை விமான நிலையத்தின் ஒருங்கிணைந்த சர்வதேச முனைய விரிவாக்க பணிகள் ரூ.2467 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் கட்ட முனைய பணிகள் முடிக்கப்பட்டு கடந்த 2023-ல் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது.
விமான முனையம்


சென்னை, 23 மார்ச் (ஹி.ச.)

சென்னை விமான நிலையத்தின் ஒருங்கிணைந்த சர்வதேச முனைய விரிவாக்க பணிகள் ரூ.2467 கோடி செலவில் நடைபெற்று வருகிறது.

இதில் முதல் கட்ட முனைய பணிகள் முடிக்கப்பட்டு கடந்த 2023-ல் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது.

தொடர்ந்து சென்னை விமான நிலையத்தின் சர்வதேச முனையத்தின் 2-ம் கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டு இருந்தது.

ஆனால் மேற்கு ஆசியாவில் நிலவும் பதட்டத்தால் ஸ்டீல் உட்பட ஒரு சில பொருள்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பணிகள் முடிவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.

தற்போது வரை 40 சதவீத கட்டுமான பணிகள் முடிந்து உள்ளன.

இப்போது சர்வதேச முனையத்தின் முன்பக்கம் பகுதியில் பணிகள் மேற்கொள்ள இரும்பு தடுப்புகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்காக வருகை மற்றும் புறப்பாடு முனையத்திற்கு இடையிலான வாகன போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.

இந்த பகுதியில் பணிகள் முடிந்ததும் உட்புற வேலைகள் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.

இதையடுத்து 2-ம் கட்ட சர்வதேச முனைய பணி முழுவதும் வருகின்ற டிசம்பர் மாதத்திற்குள் முடித்து திறக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறும்போது,

ஒருங்கிணைந்த முனையத்தில் 2-ம் கட்ட விரிவாக்க பணிகள் முடிந்து பயன்பாட்டுக்கு வந்தால் பயணிகளை கையாளும் திறன் அதிகரிக்கும்.

ஆண்டுக்கு 3.5 கோடி பயணிகளை கையாள முடியும். தற்போது சென்னை விமான நிலைய சர்வதேச முனையங்களில் 'கோட் இ' ரக விமானங்கள் வரை கையாளும் வசதி உள்ளது.

இந்த 2-ம் கட்ட பணிகள் முடிக்கப்பட்டு திறக்கப்பட்டால் பெரிய இறக்கை கொண்ட 'கோட் எப் ரக விமானங்களையும் கையாள முடியும்.

இதனால் பெங்களூரு மற்றும் ஐதராபாத் விமான நிலையங்கள் போல சென்னைக்கும் அதிக விமான நிறுவனங்களை ஈர்க்க உதவும். தற்போது சர்வதேச முனையத்தில் 120 செக் இன் கவுண்டர்கள் உள்ளது.

2-ம் கட்ட பணிகள் முடிந்து திறக்கப்பட்டால் புதிதாக 72 செக் இன்கவுண்டர்கள் திறக்கப்படும். இதனால் பயணிகள் விரைவாக பாதுகாப்பு சோதனை உட்பட அனைத்து சோதனைகளையும் முடித்து செல்ல முடியும் என்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam