Enter your Email Address to subscribe to our newsletters

செங்கல்பட்டு, 23 மார்ச் (ஹி.ச.)
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே வட்டிப் பணத்திற்காக அரசியல் பின்புலம் கொண்ட நபர்கள் விடுத்த கொலை மிரட்டலால் கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை கடிதம் எழுதி வைத்துவிட்டு தனது கையை அறுத்து ரத்தத்தை கைரேகையாக வைத்து விட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் காளிதாஸ். இவரது மகன் விக்னேஷ் (21), செங்கல்பட்டு மாவட்டம் தைலாவரம் பகுதியில் தங்கி, அங்குள்ள தனியார் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வருகிறார்.
தனது குடும்பச் சூழ்நிலை மற்றும் கல்லூரி கட்டணம் செலுத்துவதற்காக, தன்னுடன் பயிலும் நவீன் என்பவரிடம் விக்னேஷ் 6 லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது.
இதற்காக ஏற்கனவே மூன்று தவணைகளாக 1,10,000 ரூபாயை விக்னேஷ் திருப்பிச் செலுத்தியுள்ளார்
இந்நிலையில், மீதமுள்ள தொகைக்கு 10 சதவீத வட்டி என கணக்கிட்டு, மொத்தம் 13,50,000 ரூபாய் தரவேண்டும் என நவீன் மற்றும் அவரது தரப்பினர் விக்னேஷை வற்புறுத்தியுள்ளனர்.
மேலும், மன்னார்குடியைச் சேர்ந்த ஹரிஷ் என்பவர் 5-க்கும் மேற்பட்ட நபர்களுடன் விக்னேஷின் சொந்த ஊருக்குச் சென்று, அவரது தாயார் மற்றும் தந்தை வேலை பார்க்கும் இடத்திற்குச் சென்று கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதற்கிடையே தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட விக்னேஷ் தனது கடிதத்தில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் மற்றும் நகரமன்ற தலைவர் செந்தில் ஆகியோரின் உறவினர்கள் எனக் கூறி ஹரிஷ் உள்ளிட்டோர் மிரட்டுகின்றனர் உடனடியாக பணம் தராவிட்டால் நகரமன்ற தலைவரின் மகன் டி.எஸ்.கிருஷ்ணா வந்து உங்கள் குடும்பத்தையே அழித்துவிடுவார் என மிரட்டுகிறார்கள் பெற்ற கடனுக்காக அரசியல் ரவுடிகளின் பெயரை வைத்து மிரட்டுவதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
மனமுடைந்த விக்னேஷ், தனது உயிரிழப்புக்கு நவீன், ஹரிஷ் மற்றும் அரசியல் குண்டர்களே காரணம் என உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார்.
மேலும், அந்த கடிதத்தின் கீழே தனது கையை அறுத்து அதிலிருந்து வந்த ரத்தத்தையே கைரேகையாக வைத்துள்ளார்
இதனைத் தொடர்ந்து அவர் தற்கொலைக்கு முயன்ற நிலையில் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்
தற்போது விக்னேஷிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
இச்சம்பவம் குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள நவீன் ,ஹரிஷ் மற்றும் மிரட்டல் விடுத்த நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லூரி மாணவர் ஒருவர் வட்டி கொடுமையால் ரத்தத்தால் கடிதம் எழுதி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN