Enter your Email Address to subscribe to our newsletters

கிருஷ்ணகிரி, 23 மார்ச் (ஹி.ச.)
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள எர்ரம்பட்டி கிராமத்தில், செங்கல் சூளையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டர் திருடப்பட்டது தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
டிராக்டர் ஓட்டத் தெரிந்த நபரை கூலிக்கு அழைத்து வந்து இந்த திருட்டு அரங்கேற்றப்பட்டது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
எர்ரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஞானவேல் என்பவர் செங்கல் சூலை நடத்தி வருகிறார்.
இவரது சூளையில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக பயன்படுத்தப்படும் டிராக்டர், கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்ம நபர்களால் திருடிச் செல்லப்பட்டது.
இதுகுறித்து ஞானவேல் அளித்த புகாரின் பேரில், போச்சம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
போச்சம்பள்ளி முதல் திருப்பத்தூர் வரையிலான சாலைகளில் இருந்த சுமார் 30-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை மிகத் துல்லியமாக ஆய்வு செய்தனர்.
அதில் டிராக்டர், திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை அடிவாரப் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்தது.
அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த டிராக்டரை மீட்ட போலீசார், குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.
போலீசாரின் விசாரணையில், ஊத்தங்கரை அடுத்த கோவிந்தாபுரம் ஊராட்சி கொம்பம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த காந்தி
(திருப்பதி மகன்) என்பவர் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.
காந்தி, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஞானவேலின் செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை செய்துள்ளார்.
அப்போது அங்குள்ள நிலவரங்களை நன்கு நோட்டமிட்ட அவர், வேலையை விட்டு நின்றுள்ளார்.
டிராக்டரை திருட திட்டமிட்ட காந்திக்கு அதை ஓட்டத் தெரியாது என்பதால், பக்கத்து கிராமமான மகனூர்பட்டி ஊராட்சி குறும்பர் வலசை கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் (சம்பத் மகன்) என்பவரை அணுகியுள்ளார்.
விக்னேஷிற்கு வண்டி ஓட்டக் கூலி தருவதாக ஆசை வார்த்தை கூறி, அவரை அழைத்து வந்து நள்ளிரவில் யாருமில்லாத நேரத்தில் டிராக்டரை திருடிச் சென்றுள்ளார்.
விசாரணையைத் தொடர்ந்து காந்தி மற்றும் விக்னேஷ் ஆகிய இருவரையும் கைது செய்த போச்சம்பள்ளி போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
வேலை செய்த இடத்திலேயே கைவரிசை காட்டியதும், வண்டி ஓட்டத் தெரிந்த நபரை வாடகைக்கு அழைத்து வந்து திருட்டில் ஈடுபட்டதும் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN