Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 23 மார்ச் (ஹி.ச.)
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் பக்தர்களுக்கு இலவச லட்டு பிரசாதம் மீண்டும் விநியோகிக்கப்பட்டது. கோவில் நிர்வாகத்தினர் எரிவாயு அடுப்புகளுக்குப் பதிலாக விறகு அடுப்பைப் பயன்படுத்தி லட்டுகளைத் தயாரித்து விநியோகிக்கத் தொடங்கியதால் பக்தர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
அவர்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் லட்டு இலவசமாக பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.
தரிசனம் முடித்து திருமஞ்சன கோபுர நுழைவு வாயில் வழியாக வெளியே வரும் பக்தர்களுக்கு லட்டுகள் வழங்கப்படுகின்றன.
இதற்கென லட்டு தயாரிப்பு கூடம் செயல்பட்டு வருகிறது. அங்கு பணியாளர்கள் எரிவாயு அடுப்புகளைப் பயன்படுத்தி லட்டுகளைத் தயார் செய்து அனுப்புகிறார்கள்.
இந்நிலையில், போர் காரணமாக எல்.பி.ஜி. எரிவாயு வெளிநாடுகளில் இருந்து வருவது குறைந்ததால் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இதன் காரணமாக பல உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகள் மூடப்பட்டன.
அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு எரிவாயு சிலிண்டர்கள் வராததால் லட்டு தயாரிக்கும் பணி பாதிக்கப்பட்டு, முன்தினம் பக்தர்களுக்கு இலவசமாக லட்டு பிரசாதம் வழங்குவது நிறுத்தப்பட்டது.
அதே போன்று, கட்டண பிரசாத விற்பனை நிலையத்தில் முறுக்கு, எள்ளுவடை, லட்டு, அதிரசம் போன்ற பிரசாதங்களின் விற்பனையும் முழுவதுமாக நிறுத்தப்பட்டது.
பிரசாதங்களை தொடர்ந்து வழங்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர்.
அதன் படி, கோவில் நிர்வாகம் மாற்றாக விறகு அடுப்பு மூலம் லட்டு தயாரித்து வழங்க முடிவு செய்தது.
இதையடுத்து முன் தினம் இரவு கோவில் நிர்வாகம் விரைந்து செயல்பட்டு, எரிவாயு அடுப்புக்கு பதிலாக விறகு அடுப்பில் லட்டு தயாரித்து வழங்க ஏற்பாடு செய்தது.
Hindusthan Samachar / JANAKI RAM