Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 மார்ச் (ஹி.ச.)
சென்னையில் உள்ள சிவன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறும் பங்குனி பெருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இதில் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தின்போதும் அறுபத்து மூவர் திருவிழாவின் போது, கோவிலின் 4 மாட வீதிகளில் உலா வரும் தேரோட்டத்தை காண லட்சக்கணக்கான பொதுமக்கள் சென்னை மட்டுமின்றி, பல்வேறு ஊர்களில் இருந்து வருவார்கள்.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான வருடாந்திர பங்குனிப் பெருவிழா மற்றும் அறுபத்து மூவர் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. இந்தத் திருவிழா வரும் ஏப்ரல் 1ம் தேதி வரை நடைபெற உள்ளது.
கொடியேற்றத்தை முன்னிட்டு இன்று காலை 5.45 மணிக்கு கபாலீஸ்வரர், கற்பகாம்பாள், விநாயகர், சிங்காரவேலர், சண்டிகேஸ்வரர் மண்டபத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து, காலை 6.20 மணி முதல் 6.50 மணி வரை கொடியேற்றம் நடந்தது. இந்த விழாவில், ஏராளமானோர் பங்கேற்றனர். பின், விமான சேவை நடைபெற்றது. இன்று இரவு அம்மை, மயில் வடிவத்தில் சிவபூஜை காட்சியும், புன்னை, கற்பக, வேங்கை மர வாகனங்கள் புறப்பாடும் நடைபெறவுள்ளது.
மார்ச் 25ம் தேதி அதிகாரநந்திக் காட்சி நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து, கந்தர்வன், கந்தர்வி, மூஷிகம், வெள்ளிவிடை வாகனங்கள் புறப்பாடும், திருஞான சம்பந்தர் திருமுலைப்பால் விழாவும் நடைபெறவுள்ளது. மார்ச் 27ம் தேதி வெள்ளி ரிஷப வாகனக் காட்சி நடைபெறவுள்ளது.
பங்குனிப் பெருவிழாவின் பிரதான நிகழ்வான கபாலீஸ்வரர் தேரில் மார்ச் 29ம் தேதி காலை எழுந்தருள்கிறார்.
மேலும், எட்டாம் நாள் விழாவாக மார்ச் 30ம் தேதி அறுபத்து மூவர் வீதியுலா நடைபெறும். மார்ச் 31-ம் தேதி ஐந்திருமேனிகள் விழா நடைபெறவுள்ளது.
ஏப்ரல் 1ம் தேதி தீர்த்தவாரி நடைபெறவுள்ளது. தொடர்ந்து, இரவு 8:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவத்தோடு கொடி இறக்கப்பட்டு பங்குனி விழா நிறைவு பெறுகிறது.
Hindusthan Samachar / vidya.b