புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆதரவாளர்கள் போராட்டம்
புதுச்சேரி, 23 மார்ச் (ஹி.ச) அடுத்த மாதம் ஏப்ரல் 9ஆம் தேதி புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்பட்டு மே 4ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 30 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட
Supporters of Narayanasamy stage a protest


புதுச்சேரி, 23 மார்ச் (ஹி.ச)

அடுத்த மாதம் ஏப்ரல் 9ஆம் தேதி புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்பட்டு மே 4ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

30 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரியில், ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜ.க - அ.தி.மு.க. அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியும், ஆட்சியைப் பிடிக்கக் காங்கிரஸ் - தி.மு.க. அடங்கிய கூட்டணியும் தீவிர முனைப்பில் ஈடுபட்டு வருகின்றன.

இது தவிர, புதிதாக களமிறங்கியிருக்கும் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் மட்டுமின்றி புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலிலும் த.வெ.க.வும் போட்டியிடுவதாக அறிவித்து வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

இதனால், அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது. இந்நிலையில் தான் காங்கிரஸ் - திமுக இடையே தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்பட்டு கூட்டணி உறுதியாகியுள்ளது.

அதன்படி காங்கிரஸ் 16, திமுக 12, விசிக 1, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1 என 30 தொகுதிகளில் போட்டியிடக் கூட்டணிக்குள் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் மத்திய அமைச்சருமான நாராயணசாமிக்கு தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சி சார்பில் சீட் வழங்கப்படவில்லை என்ற தகவல் வெளியானது.

இதனையடுத்து, அவரது ஆதரவாளர்கள் புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கத்தின் வீட்டை இன்று (23.03. 2026) முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேட்புமனுத் தாக்கலுக்கான கடைசி நாளான இன்று நாராயணசாமிக்குப் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதாகத் தகவல் பரவியதால் ஆத்திரமடைந்த நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் வைத்திலிங்கம் வீட்டின் முன்பு திரண்டு முழக்கங்களை எழுப்பினர்.

அப்போது நாராயணசாமிக்கு சீட் வழங்க வேண்டும், கட்சித் தலைவர் பதவியில் இருந்து வைத்திலிங்கம் விலக வேண்டும் என கோரிக்கை விடுத்து நாராயணசாமி ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b