Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 மார்ச் (ஹி.ச)
தமிழகத்தில் அடுத்த மாதம் 23- ஆம் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
அதன்படி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. இடையிலான இறுதிக் கட்டப் பேச்சுவார்த்தை இன்று (23.03.2026) மாலை நடைபெற உள்ளது.
இதற்காகத் தமிழக பா.ஜ.க. மேலிடப் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் இன்று காலை 10 மணி அளவில் சென்னை வந்தடைந்தார்.
சென்னை விமான நிலையம் வந்த பியூஷ் கோயலை, எல்.முருகன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர் கூறியதாவது,
திமுக- காங்கிரஸ் கூட்டணி மீது மக்கள் விரக்தி மற்றும் அதிருப்தியில் உள்ளனர். காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஒவ்வொரு மாநிலத்திலும் தோல்வியை சந்திக்கின்றன.
தமிழகம் மாற்றத்திற்கு தயாராக உள்ளது. தமிழக அரசியலில் புதிய தொடக்கம், மாற்றத்தை மக்கள் வரவேற்கிறார்கள்.
அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் முதல்வராக வர வேண்டும் என தமிழக மக்கள் விரும்புகின்றனர்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்.
வளர்ந்த தேசத்திற்கு வளர்ந்த தமிழகம் வழிவகுக்கும். தேஜ கூட்டணி ஒரு குடும்பம் போல் செயல்பட்டு வருகிறது.
ஊழல் கறை படிந்த திமுக கூட்டணியை வீழ்த்த அதிமுக தலைமையில் கூட்டணி அமைந்துள்ளது. இன்று மாலை தேசிய ஜனநாயக கூட்டணி தொகுதி பங்கீடு நடைபெறும்.
கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் அமர்ந்து பேசி தொகுதி பங்கிட்டு விவரங்களை அறிவிப்போம். அனைவரும் மகிழ்ச்சி மற்றும் திருப்தி அடையும் வகையில் தொகுதி பங்கீடு அமையும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். தமிழகத்தில் வளர்ச்சிக்கான அரசு அமைய வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள்
இவ்வாறு பியூஷ் கோயல் கூறினார்.
அதனைத் தொடர்ந்து அவர் இன்று மாலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து ஆலோசிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அப்போது பாஜகவுக்கு 27 முதல் 30 தொகுதிகள் வரை ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
அதிலும் குறிப்பாகச் சென்னையில் வேளச்சேரி, மயிலாப்பூர் மற்றும் தியாகராயநகர் உள்ளிட்ட முக்கியத் தொகுதிகளை பா.ஜ.க. கோரியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சந்திப்பின் முடிவாக இன்று மாலை நடைபெறவுள்ள கூட்டத்தில் இரு கட்சிகளுக்கும் இடையிலான அதிகாரப்பூர்வ தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் பின்னர் பியூஸ் கோயல் இன்று இரவு டெல்லிக்குப் புறப்பட்டுச் செல்கிறார்.
அதே சமயம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில், அ.தி.மு.க. 170 இடங்களிலும், பா.ஜ.க. 30 இடங்களிலும், பா.ம.க. 17இடங்களிலும், அ.ம.மு.க. 12 இடங்களிலும் போட்டியிட வாய்ப்பு உள்ளது எனக் கூறப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b