தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக த.வெ.க சேலம் மத்திய மாவட்டச் செயலாளர் பார்த்திபன் மீது வழக்கு பதிவு
சேலம், 23 மார்ச் (ஹி.ச) தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. போலீசார் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக வெற்
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக தவெக சேலம் மத்திய மாவட்டச் செயலாளர் பார்த்திபன் மீது வழக்கு பதிவு


சேலம், 23 மார்ச் (ஹி.ச)

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. போலீசார் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் சேலம் மத்திய மாவட்டச் செயலாளர் பார்த்திபன் மீது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக இன்று (23.03.2026) வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதாவது தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையின் சார்பில் சேலம் தெற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் தமிழ்வேந்தன் அளித்த புகாரின் அடிப்படையில் அண்ணதானப்பட்டி காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி பகுதியில் கடந்த 21ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நடபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியின் போது பொதுமக்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் கூறப்படுகிறது.

அதே சமயம் சேலம் மாவட்டம் சூரமங்கலம் பகுதியில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நேற்று முன்தினம் (21.03.2026) காலை சிறப்புத் தொழுகை நடத்த இஸ்லாமியர்கள் வந்திருந்தனர்.

அப்போது அங்கு வந்து தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் அங்குள்ள இஸ்லாமியர்களுக்கு தண்ணீர் கொடுப்பதற்காக 500 சிறிய தண்ணீர் பாட்டில்கள் வைத்திருந்தனர். அதில் தமிழக வெற்றிக் கழகத்தின் பெயர், மற்றும் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து அங்கு வந்ந்த பறக்கும்படை அதிகாரிகள் அவற்றைப் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக சூரமங்கலம் காவல் நிலையத்தில் த.வெ.க. நிர்வாகிகள் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

முன்னதாக த.வெ.க. ராமநாதபுரம் கிழக்கு மாவட்டச் செயலாளர் மலர்விழி மீது சிறார்களைப் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது பார்த்திபன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / vidya.b