Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 மார்ச் (ஹி.ச)
மாஞ்சா நூல் பயன்படுத்தி காற்றாடி பறக்கவிடுவது உயிரிழப்பு போன்ற விபத்துக்களை ஏற்படுத்தும் என்பதால் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் செயல்முறை உத்தரவின் பேரில் சென்னை பெருநகர காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காற்றாடி மற்றும் மாஞ்சா நூல் தயாரிப்பது, விற்பனை செய்வது மற்றும் மாஞ்சா நூல் பயன்படுத்தி காற்றாடி பறக்க விடுவது தடை செய்யப்பட்டுள்ளது.
அதன்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தங்களது காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கண்காணித்து, காற்றாடி மற்றும் மாஞ்சா நூல் தயாரிப்பவர்கள், விற்பனை செய்பவர்கள் மற்றும் மாஞ்சா நூல் பயன்படுத்தி காற்றாடி பறக்கவிடுபவர்கள் கண்காணித்து கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில்,கடந்த 22.03.2026 அன்று மாலை, முகமது ரஷித், வ/26 என்பவர் அவரது சகோதரருடன் மதுரவாயல் பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, மாஞ்சா நூல் பட்டு காயம் ஏற்பட்டதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொடுத்த புகாரின்பேரில், T-5 வானகரம் காவல் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.
இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கைது செய்து நடவடிக்கை எடுக்க கோயம் பேடு துணை ஆணையாளர் அவர்களின் மேற்பார்வையில், விருகம்பாக்கம் உதவி ஆணையாளர் தலைமையில் T-5 வானகரம் காவல் நிலைய ஆய்வாளர் அடங்கிய காவல் குழுவினர் தீவிர விசாரணை மற்றும் தேடுதல் நடத்தி மேற்படி வழக்கில் தொடர்புடைய பிரெய்ன் ஆண்டனி, வ/22, ஓடமா நகர், வானகரம், சென்னை என்பவரை கைது செய்தனர்.
மேலும் பிரெய்ன் ஆண்டனியுடன் சேர்ந்து காற்றாடி பறக்கவிட்ட 17 வயது இளஞ்சிறாரிடம் விசாரணை செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 1 காற்றாடி மற்றும் மாஞ்சா நூல் கண்டு பறி முதல் செய்யப்பட்டது.
மேலும் போலீஸ் விசாரணையில், இன்ஸ்டாகிராம் மற்றும் யுடியூப்களில் வந்த விளம்பரங்களை பார்த்து தொடர்பு கொண்டு, விருகம்பாக்கத்தில் உள்ள ஒருவரின் வீட்டில் இருந்து காற்றாடி மற்றும் மாஞ்சா நூல் வாங்கியது தெரிய வந்ததின் பேரில், காவல்குழுவினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டு,காற்றாடி விற்பனை செய்த சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த சம்சுதீன், வ/40, சாதிக் பாஷா என்பவரை கைது செய்து, அவரது வீட்டில் இருந்து சுமார் 350 காற்றாடிகள் மற்றும் மாஞ்சா நூல் கொண்ட 5 லொட்டாய்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் விசாரணையில், சம்சுதீன் என்பவர் தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல் மற்றும் காற்றாடிகளை பெங்களூரிலிருந்து இருந்து மொத்தமாக கூரியர் மூலம் வாங்கி சென்னையில் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் விற்பனை செய்தது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட பிரெய்ன்ஆண்டனி மற்றும் சம்சுதீன் ஆகிய இருவரும், விசாரணைக்குப்பின்னர் நேற்று (23.03.2026) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.
17 வயது இளஞ்சிறார், சிறார் நீதிக்குழுமத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ