Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 மார்ச் (ஹி.ச.)
தமிழக சட்டசபை தேர்தலை ஒட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலில் இருப்பதால், சென்னை விமான நிலையத்தில், சுங்கத்துறையினருக்கு தேர்தல் ஆணையம் கொடுத்த அறிவுறுத்தலின்படி, கூடுதலாக ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகளை நியமித்து, சென்னைக்கு வரும் அனைத்து விமான பயணிகள், அதேபோல் சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் விமான பயணிகள் போன்றவர்களை, தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மலேசியா அருகே உள்ள புரூனே என்ற நாட்டிலிருந்து, ராயல் புரூனே ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் அதிகாலை வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை, சென்னை விமான நிலைய சுங்கத்துறை ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்துக் கொண்டு இருந்தனர்.
அப்போது வடமாநிலத்தைச் சேர்ந்த சுமார் 25 வயது இளைஞர் ஒருவர், டெல்லியில் இருந்து வியட்நாம் நாட்டிற்கு சுற்றுலா பயணியாக சென்று விட்டு, அந்த இளைஞர், வியட்நாமில் இருந்து, புரூனே நாடு வழியாக, இந்த விமானத்தில் சென்னைக்கு வந்திருந்தார்.
அந்த வட மாநில இளைஞர் மீது ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதை அடுத்து அந்த இளைஞரை நிறுத்தி விசாரித்தனர்.
அப்போது அவர் விசாரணைக்கு சரிவர பதில் அளிக்கவில்லை.
இதை அடுத்து அந்த வட மாநில இளைஞரை சுங்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று, அவருடைய உடமைகளை பரிசோதித்தனர்.
அவருடைய சூட்கேசில், 10 பாலிதீன் பேப்பரால் கட்டப்பட்ட பார்சல்கள் இருந்தன. அவைகளை சுங்க அதிகாரிகள் பிரித்துப் பார்த்து சோதித்தனர். அதனுள் பதப்படுத்தப்பட்ட மிகவும் விலை உயர்ந்த, ஹைட்ரோபோனிக் கஞ்சா இருந்ததை கண்டுபிடித்தனர்.10 பார்சல் களிலும் மொத்தம் 5 கிலோ, ஹைட்ரோபோனிக் கஞ்சா இருந்ததை கண்டுபிடித்தனர்.
அதன் சர்வதேச மதிப்பு ரூ.5 கோடி ஆகும்.
இதையடுத்து சுங்க அதிகாரிகள், வட மாநில பயணியை கைது செய்து, ரூ.5 கோடி மதிப்புடைய ஹைட்ரோபோனிக் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
அவரிடம் மேலும் சுங்க அதிகாரிகள் விசாரணை நடத்திய போது, போதை கடத்தல் கும்பலுக்கு, இந்த இளைஞர் கடத்தல் குருவியாக செயல்படுகிறார் என்றும், இந்த போதை பொருளை, இங்குள்ள சர்வதேச போதை கடத்த கும்பலிடம் ஒப்படைக்க எடுத்து வந்தது தெரியவந்தது. இதை அடுத்து, இந்தப் போதைப் பொருளை, சென்னையில் யாருக்காக கடத்திக் கொண்டு வந்தார்? என்று சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதோடு ரூ. 5 கோடி மதிப்புடைய 5 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தி வந்த வடமாநில இளைஞர் கைது செய்யப்பட்ட தகவலை, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கும், சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதற்கு இடையே வழக்கமாக தாய்லாந்து, இலங்கை, மற்றும் அரேபிய நாடுகள் போன்ற இடங்களில் இருந்து தான், இதேபோல் உயரக கஞ்சா கடத்தி வரப்படும். ஆனால் முதல் முறையாக, வியட்நாமிலிருந்து, புருனே வழியாக, சென்னைக்கு போதைப்பொருள் கடத்திக் கொண்டு வரப்பட்டு உள்ளது என்று சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN