Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 மார்ச் (ஹி.ச.)
அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க. மற்றும் அ.ம.மு.க. இடையிலான தொகுதிப் பங்கீடு குறித்த இறுதிக் கட்டப் பேச்சுவார்த்தை அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று (23.03.2026) நடைபெற்றது.
இதனையடுத்து அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. பா.ம.க.வுக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அ.ம.மு.க.விற்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
இந்த தேர்தலில் தங்களுக்கு 6 இடங்களை ஒதுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் அ.தி.மு.க.விடம் கோரிக்கை வைத்து வந்ததாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்த அ.தி.மு.க., 3 இல் இருந்து 4 தொகுதிகள் வரை கொடுப்பதற்குத் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக நேற்று நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி தொகுதிப் பங்கீட்டுக்கு ஜி.கே. வாசன் வராமல் புறக்கணித்திருந்தார் எனக் கூறப்பட்டது. இதன் மூலம், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஜி.கே.வாசன் அதிருப்தியில் இருப்பதாகத் தகவல் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளார் எடப்பாடி பழனிசாமியை ஜி.கே. வாசன் இன்று சந்தித்து பேசியிருந்தார்.
எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த பிறகு ஜி.கே. வாசன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
கூட்டணிக் கட்சியின் தலைவர் எடப்பாடி பழனிசாமியை நேரடியாகச் சந்தித்து சுமுகமான முறையிலே தேர்தல் பிரச்சாரம், தொகுதிப் பங்கீடு தொடர்பான அதுமட்டுமல்லாமல் முக்கியமாகத் தொகுதிப் பங்கீடு குறித்துக் கலந்து பேசினேன்.
தொகுதிகள் எத்தனை எண்ணிக்கை என்பது அதிகாரப்பூர்வமாக அந்தந்த கட்சியின் தலைமையை அறிவிக்கும் எதுவாக இருந்தாலும் கட்சி அறிவிக்கும். என்னுடைய தனி சின்னம் எல்லாம் இப்போது தேர்தல் ஆணையத்தில் பிரச்சனையில் இருக்கிறது.
சின்னம் தொடர்பான மனு நிலுவையில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் பதிலுக்காக காத்திருக்கிறோம்.
அதற்கு ஏற்றவாறு முடிவுகள் எடுக்கப்படும். தொகுதி தொடர்பான எண்ணிக்கை இறுதி செய்யப்பட்டு விட்டது. அதிகாரப்பூர்வமான அறிவிப்பைக் கட்சியின் தலைமைதான் கூட்டணி தலைமைதான் அறிவிக்கும்.
சுமுகமான முறையிலே தொகுதி தொடர்பான எண்ணிக்கை இறுதி செய்யப்பட்டு விட்டது. அதேபோல தொகுதிகளும் சுகமாக இருக்க வேண்டும் என்று பேசிக்கொண்டிருக்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / vidya.b