Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 மார்ச் (ஹி.ச.)
அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க. மற்றும் அ.ம.மு.க. இடையிலான தொகுதிப் பங்கீடு குறித்த இறுதிக் கட்டப் பேச்சுவார்த்தை நேற்று (23.03.2026) நடைபெற்றது.
தமிழக பா.ஜ.க. மேலிடப் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் தலைமையில் நடைபெற்ற இப்பேச்சு வார்த்தையில் அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 27தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. பா.ம.க.வுக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அ.ம.மு.க.விற்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
மற்றொருபுறம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அதிருப்தியில் இருப்பதாகத் தகவல் வெளியாகியிருந்தது.
இந்த தேர்தலில் தங்களுக்கு 6 இடங்களை ஒதுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் அ.தி.மு.க.விடம் கோரிக்கை வைத்து வந்ததாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்த அ.தி.மு.க., 3இல் இருந்து 4 தொகுதிகள் வரை கொடுப்பதற்குத் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை இழுபறி நீடித்து வருகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜி.கே.வாசனுக்கு மாநிலங்களவை பதவி தரப்பட்ட நிலையில், இம்முறை அதுவும் வழங்கப்படவில்லை.
இதனை தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று (23.03.2026) நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி தொகுதிப் பங்கீட்டுக்கு ஜி.கே. வாசன் வராமல் புறக்கணித்திருந்தார்.
இதன் மூலம், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஜி.கே.வாசன் அதிருப்தியில் இருப்பதாகத் தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் ஜி.கே. வாசன் இன்று (24.03.2026) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
அதி.மு.க மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தொகுதிப் பங்கீட்டில் த.மா.கா.வின் எண்ணிக்கைகள் குறித்து முடிவு எடுக்கப்பட்டது. நான் நேற்று (23.03.2026 - திங்கட்கிழமை) இரவு சென்னையில், மத்திய அமைச்சரும். தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயலைச் சந்தித்தேன்.
நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தொகுதிப் பங்கீட்டில் த.மா கா.விற்கான தொகுதிகளின் எண்ணிக்கைகள் குறித்து முடிவு எடுக்கப்பட்டது.
என அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b