Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 24 மார்ச் (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற கழுகாசலமூர்த்தி கோவிலில், இந்த ஆண்டிற்கான பங்குனி உத்திரத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.
நேற்று காலை 7 மணியளவில் வேத மந்திரங்கள் முழங்கத் திருக்கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் கொடிமரத்திற்குச் சிறப்புத் தீபாராதனை காட்டப்பட்டு, சுவாமிக்கு மகா அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இரவு 7 மணியளவில் முருகப்பெருமான், வள்ளி - தெய்வானையுடன் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்குக் காட்சியளித்தார். இதனைத் தொடர்ந்து, செம்மநாட்டார் தேவர் சமுதாயம் சார்பில் முதல் நாள் மண்டகப்படி திருவிழா நடைபெற்றது.
பத்து நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில் தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதியுலா வரும் நிகழ்வு நடைபெறும். சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் மார்ச் 31 (செவ்வாய்க்கிழமை) அன்று விமரிசையாக நடைபெற உள்ளது. ஏப்ரல் 2-ஆம் தேதி முருகப்பெருமான் - வள்ளி, தெய்வானை திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.
இவ்விழாவிற்கான முன்னேற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b