Enter your Email Address to subscribe to our newsletters

பெரம்பலூர் , 24 மார்ச் (ஹி.ச)
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தில் மலை மீது உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயில் வடபழனி என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் திருவிழா கோலாகலமாக நடைபெறும்.
இந்தாண்டு திருவிழா நேற்று மாலை விநாயகர் வழிபாடு வாஸ்து சாந்தியுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து இன்று காலை 8.35 மணியளவில் கொடியேற்றம் ஏற்றப்பட்டது. இதையொட்டி மூலவர் தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. மேலும் கொடி மரத்திற்கு சிறப்பு யாகம் நடத்தப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் பக்தர்களின் அரோகரா அரோகரா கோஷத்துடன் கொடியேற்றப்பட்டது. விழாவில் செட்டிகுளம், நாட்டார்மங்கலம், கூத்தனூர் உள்ளிட்ட பல்வேறு சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி தினமும் காலை, இரவு தண்டாயுதபாணி சாமிக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, சுவாமி திருவீதி உலா நடைபெறும். வருகிற 30-ம் தேதி இரவு 7.30 மணியளவில் திருக்கல்யாண உற்சவமும், சுவாமி வீதி உலா நடைபெறுகிறது. 31-ம் தேதி இரவு குதிரை வாகனம், வெள்ளி மயில் வாகனம் மற்றும் புஷ்ப பல்லக்கில் சுவாமி வீதியுலா நடைபெறவுள்ளது.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 1-ம் தேதி நடைபெறவுள்ளது. அன்று மாலை 4.00 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. 2-ம்தேதி மாலை 7 மணிக்கு தேர் நிலைக்கு வந்தடைகின்றன. பின்னர் இரவு 7 மணிக்கு தீர்த்தவாரியும், கொடி இறக்கும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.
3-ம் தேதி காலை 10 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார வழிபாடு மற்றும் சுவாமி புறப்பட்டு சிவன் கோயிலுக்கு வந்தடைதல். 4-ம் தேதி காலை 10 மணிக்கு மலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, இரவு 10 மணிக்கு செட்டிகுளம் கடை வீதியில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் பஞ்சமூர்த்திகள் பஞ்ச வீதி உலா நடைபெறவுள்ளது.
Hindusthan Samachar / vidya.b