Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 24 மார்ச் (ஹி.ச.)
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை மாநகரில அமைந்துள்ள அருணாசலேஸ்வரர் கோவிலில் தினம்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், பௌர்ணமி உள்ளிட்ட நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் திருவண்ணாமலைக்கு வருகை தந்து 14 கிலோ மீட்டர் கொண்ட கிரிவலப் பாதையில் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிபாடு செய்கின்றனர்.
இந்நிலையில் அமெரிக்கா, இஸ்ரேல் ஈரான் போர் காரணமாக நாடு முழுவதும் எல்பிஜி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரையில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விற்பனை மிகவும் குறைக்கப்பட்டு மருத்துவமனை உள்ளிட்ட அத்தியாவசியங்களுக்கு மட்டுமே விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
வீட்டு உபயோக சிலிண்டர் மட்டும் ஒரு குடும்பத்திற்கு 21 நாட்களுக்கு ஒரு முறை ஒரு சிலிண்டர் என விநியோகம் செய்யப்படும் என நிர்வாகம் அறிவிக்கப்பட்டுள்ளது.
வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக திருவண்ணாமலை மாநகரில் ஏற்கனவே சிறு குறு உணவகங்கள் மற்றும் மெஸ் போன்ற உணவகங்கள் மூடப்பட்டுள்ளது.
அருணாச்சலேஸ்வரர் கோவில் பொருத்தவரை பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வழங்கப்படும் இலவசமாக லட்டு பிரசாதமும், 50 ரூபாய்க்கு விற்பனை செய்யக்கூடிய முறுக்கு, எள்ளு வடை, உள்ளிட்ட எண்ணெயில் தயாரிக்க கூடிய பிரசாதங்களும் கடந்த 20, 21 ஆகிய தேதிகளில் நிறுத்தப்பட்ட நிலையில் கடந்த இரு தினங்களாக விறகுகளை பயன்படுத்தி பிரசாதங்களை செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அருணாச்சலேஸ்வரர் கோயிலின் நான்காம் பிரகாரத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட அடுப்புகளை பாரம்பரிய முறைப்படி தயார் செய்து அதில் முறுக்கு, லட்டு, சர்க்கரைப் பொங்கல், புளியோதரை உள்ளிட்ட பிரசாரங்களை ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
இதில் குறிப்பாக டன் கணக்கில் விறகுகளை கொள்முதல் செய்து, இரவு பகலாக பிரசாதங்களை தயார் செய்து வருவதாக ஊழியர்கள் தெரிவித்த நிலையில், சிலிண்டர் தட்டுப்பாடு சீராகும் வரை விறகு அடுப்பு பயன்படுத்தி மட்டுமே பிரசாதங்கள் தயார் செய்ய முடியும் எனவும், கேஸ் மூலம் ஒரு லட்சம் லட்டு தயார் செய்ய முடியும், ஆனால் தற்போது விறகு அடுப்பால் சுமார் 25 ஆயிரம் லட்டுகள் மட்டுமே தயார் செய்யப்படுவதாகவும், அதில் குறிப்பாக அதிரசம், எள்ளுவடை உள்ளிட்ட பிரசாதங்கள் தற்போது தயார் செய்யும் எண்ணம் தற்காலிகமாக இல்லை எனவும், இந்தப் பிரசாதங்களை தயார் செய்வதற்கு அதிக உடல் உழைப்பு உள்ளதாகவும் ஊழியர்கள் தெரிவித்ததாக கோவில் நிர்வாகம் தெரிவிக்கின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN