Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 மார்ச் (ஹி.ச.)
தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையேயான கூட்டணியில் 2ஆம் கட்ட தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இன்று (24.03.2026) நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தையில் ஆளும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான விசிக இடையே தொகுதி பங்கீடு குறித்த அதிகாரப்பூர்வமாக உடன்பாடு இன்று எட்டப்பட்டது.
இந்த உடன்பாட்டின்படி, விசிகவுக்கு 2 பொது தொகுதிகள், 6 தனித் தொகுதிகள் உட்பட மொத்தமாக 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இறுதிச் சுற்றுப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் ஆகியோர் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
கடந்த தேர்தலைப் போல, இம்முறை வி.சி.க தனது சொந்தச் சின்னத்திலேயே அனைத்து இடங்களிலும் போட்டியிட உள்ளது.
கடந்த 2021 தேர்தலை விட (6 இடங்கள்) கூடுதலாக 2 இடங்கள் விசிகவுக்கு வழங்கப்பட்டுள்ளன.
விசிக தரப்பில் இரட்டை இலக்க எண்ணிக்கையில் (10+ இடங்கள்) கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், இறுதியாக 8 இடங்களுக்கு உடன்பாடு எட்டப்பட்டது.
அதே சமயம், புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் விசிகவுக்கு ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த அக்கட்சி, அங்கு மட்டும் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது.
திமுக கூட்டணியில் ஏற்கனவே காங்கிரஸ் (28 இடங்கள்), சிபிஐ (5 இடங்கள்), சிபிஎம் (5 இடங்கள்) மற்றும் மதிமுக (4 இடங்கள்) ஆகிய கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு நிறைவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b