Enter your Email Address to subscribe to our newsletters

கடலூர், 25 மார்ச் (ஹி.ச)
கடலுார் மாவட்டத்தில் உள்ள குடிகாடு கிராமத்தில் நடைபெற்ற அகழாய்வில், கி.மு., 1 முதல் கி.பி., 2ம் நுாற்றாண்டு வரை, ரோமானியர்கள் நேரடி வணிக தொடர்பு கொண்டிருந்ததும், கல்மணிகள் தயாரிப்பு கூடம் இருந்ததையும் தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
புதுச்சத்திரம் அடுத்த மணிக்கொல்லை கிராமத்தில் பல்வேறு நிறங்களில் துளையிட்ட, துளையிடப்படாத மணிகளும், மூல கற்களும் அதிக அளவில் கிடைப்பதால், சங்க காலத்தில் இப்பகுதியில் மணிகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், இருந்திருக்க வேண்டும் என்பதை அறிய முடிகிறது.
எனவே, மணிக்கொல்லை பகுதியில் அகழாய்வு செய்ய, கடந்தாண்டு தமிழக அரசு உத்தரவிட்டது. தொடர்ந்து, கடந்த 7ம் தேதி தமிழகத்தில் 8 இடங்களில், அகழாய்வு செய்ய மத்திய தொல்லியல் துறை அனுமதி அளித்தது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக, சிதம்பரம் அடுத்த மணிக்கொல்லை
கிராமத்தில், தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம் தலைமையில், இணை இயக்குனர் பாக்கியலட்சுமி, அகழாய்வாளர்கள் சுபலட்சுமி, குமர வேல் ஆகியோர் மேற்பார்வையில் அகழாய்வு செய்யும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது.
இது குறித்து தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம் கூறுகையில், தற்போது மணிக்கொல்லையில் அகழாய்வு பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் மஞ்சள், ஊதா, பழுப்பு, நீலம், கருப்பு, பச்சை குளித்த வண்ணங்களில் துளையிடப்பட்ட மற்றும் துளையிடப்படாத மணிகள், மூலக்கூறு கற்கள் கிடைக்கின்றன.
இனிவரும் நாட்களில் மேலும் என்ன வகையான மணிகள் கிடைக்கும் என, ஆய்வு செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b