த.வெ.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுக கூட்டம்
சென்னை, 25 மார்ச் (ஹி.ச.) தமிழகத்தில் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போவதாக நடிகர் விஜய் தலைமயேற்று நடத்தும் த.வெ.க. சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதே சமயம் சென
த.வெ.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுக கூட்டம்


சென்னை, 25 மார்ச் (ஹி.ச.)

தமிழகத்தில் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போவதாக நடிகர் விஜய் தலைமயேற்று நடத்தும் த.வெ.க. சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

அதே சமயம் சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் விருப்ப மனு அளித்தவர்களிடம் அக்கட்சியின் தலைவர் விஜய் நேர்காணல் நடத்தியிருந்தார்.

இதனையடுத்து அதிகாரப்பூர்வமான முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும் என அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. மற்றொருபுறம் 60க்கும் மேற்பட்ட தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வதில் இழுபறி என தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் த.வெ.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுக கூட்டம் நாளை மறுநாள் (27.03.2026) நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கூட்டம் மாமல்லபுரத்தில் விஜய் தலைமையில் நடைபெற உள்ளது எனக் கூறப்படுகிறது.

முதற்கட்டமாக 110 வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளனர்.

முன்னதாக தவெக தலைவர் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளிலும், தவெகவின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் தியாகராயர் நகர் தொகுதியிலும், செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையம் தொகுதியிலும், கொள்கைப் பரப்புச் செயலாளர் அருண்ராஜ் திருச்செங்கோடு தொகுதியிலும், இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் உசிலம்பட்டி அல்லது திருப்பரங்குன்றம் தொகுதியிலும் போட்டியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது.

அதே போன்று, தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கம் தொகுதியிலும், பொருளாளர் வெங்கட்ராமன் மயிலாப்பூர் தொகுதியிலும், ராஜ்மோகன் எழும்பூர் தொகுதியிலும், ஜே.சி.டி. பிரபாகர் அம்பத்தூர் தொகுதியிலும், முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன் ஸ்ரீரங்கம் தொகுதியிலும், மதியழகன் கரூர் தொகுதியிலும், வி.எஸ்.பாபு ஆர்.கே. நகர் அல்லது கொளத்தூர் தொகுதியிலும் போட்டியிட வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / vidya.b