Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 மார்ச் (ஹி.ச.)
சென்னை திருவல்லிக்கேணி செங்கல்வராயன் தெருவில் வசித்து வரும் திலகா (46) என்பவர் அளித்த புகாரின் பேரில், எதிர் வீட்டில் வசித்து வந்த துளசிராமன் மற்றும் அவரது மனைவி கடந்த 8 ஆண்டுகளாக குடும்ப நண்பர்களாக பழகி வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 2024ஆம் ஆண்டு கத்தீட்ரல் சாலை மற்றும் குத்தாம்பாக்கம் பகுதியில் அரசு கடைகள் விற்பனைக்கு வருவதாகவும், தனக்கு அரசாங்கத்தில் செல்வாக்கு இருப்பதாகவும் கூறி குறைந்த விலையில் கடைகள் வாங்கித் தருவதாக துளசிராமன் உறுதியளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை நம்பிய திலகா மற்றும் அவரது 2 உறவினர்கள் சேர்ந்து ரொக்கம் மற்றும் ஆன்லைன் பரிமாற்றம் மூலம் மொத்தம் ரூ.17.5 லட்சம் பணத்தை கொடுத்துள்ளனர்.
ஆனால் பல மாதங்கள் ஆகியும் கடைகள் பெற்றுத் தராததுடன், பணத்தை திரும்ப கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியை சேர்ந்த பெர்னாட்ஷா (33) என்பவரும் தனக்கு பெருநகர சென்னை மாநகராட்சியில் இலகுரக வாகன ஓட்டுநர் வேலை வாங்கித் தருவதாக கூறி 2022ஆம் ஆண்டு ரூ.4 லட்சம் பணம் பெற்றும் ஏமாற்றியதாக D-3 ஐஸ்அவுஸ் காவல் நிலையத்தில் தனியாக புகார் அளித்திருந்தார்.
இரு புகார்களின் பேரில் D-3 ஐஸ்அவுஸ் காவல் நிலைய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் புகார்தாரர்கள் கூறியது உண்மையென தெரிய வந்ததையடுத்து, திருவல்லிக்கேணி சிங்காராச்சாரி தெருவை சேர்ந்த துளசிராமன் (44) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட துளசிராமன் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Hindusthan Samachar / P YUVARAJ