ஜாக்குவார் காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.62,600 பறிமுதல் – தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை
சென்னை, 25 மார்ச் (ஹி.ச.) சென்னை,வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேர்தல் பறக்கும் படையினர், சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி சாலை வாட்டர் டேங்க் அருகில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். தேர்தல் விதிமுறைகள
Jaq


சென்னை, 25 மார்ச் (ஹி.ச.)

சென்னை,வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேர்தல் பறக்கும் படையினர், சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி சாலை வாட்டர் டேங்க் அருகில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், அனுமதி ஆவணங்கள் இல்லாமல் பணம் மற்றும் பொருட்கள் கொண்டு செல்லப்படுவதைத் தடுக்க இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது அந்த வழியாக வந்த ஜாக்குவார் கார் ஒன்றை சந்தேகத்தின் பேரில் பறக்கும் படையினர் நிறுத்தி சோதனை செய்தனர்.

காரை முழுமையாக பரிசோதித்தபோது, அதில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.62,600 பணம் இருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து காரை ஓட்டி வந்த ரஞ்சித் சக்கத் என்பவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அவர் சொந்த தொழில் செய்து வருபவர் என்றும், அந்த பணத்தை தனிப்பட்ட தேவைக்காக எடுத்துச் சென்றதாகவும் கூறியதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் பணத்தை கொண்டு செல்ல உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால், தேர்தல் நடத்தை விதிமுறைகளின் அடிப்படையில் அந்த தொகையை பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட ரூ.62,600 பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பெரம்பூர் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

மேலும், இதுகுறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / P YUVARAJ