Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 25 மார்ச் (ஹி.ச)
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை நிரம்பி வெளியேறும் தண்ணீரை தேக்கி வைக்க நெல்லித்துறை அருகே பவானி ஆற்றின் குறுக்கே, சிறிய அணை கட்ட வேண்டும் என, பவானி ஆற்று நீர்ப் பாசன விவசாயிகள் சங்கம், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து பவானி ஆற்று நீர்ப் பாசன விவசாயிகள் சங்க தலைவர் துரைசாமி, துணைத்தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது,
2016ம் ஆண்டு இரண்டு மாநகராட்சிகளின் குடிநீர் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இரண்டு மாநகராட்சிகளுக்கும்,தண்ணீர் எடுக்க, ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு உள்ளது.
கோடை காலத்தில் ஆற்றில் வருகின்ற சிறிதளவு தண்ணீரை தேக்கி வைத்து, அதிலிருந்து தண்ணீரை உறிஞ்சி எடுத்து வருகின்றனர்.
இதனால் மேட்டுப்பாளையம் நகரில் இருந்து சிறுமுகை வரை, பவானி ஆறு நீரோட்டம் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது.மாநகராட்சி மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. அதே நேரத்தில் கிராமப் பகுதி மக்கள், போதிய குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.
இது கிராம மக்களின் உரிமையை பறிப்பதற்கு சமமாகும். இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, பில்லூர் அணைக்கும், நெல்லித்துறைக்கும் இடையே, பவானி ஆற்றின் குறுக்கே, டொமான் என்ற இடத்தில் சிறிய அணை கட்ட வேண்டும்.
பில்லூர் அணை நிரம்பி வழிந்து வெளியேற்றும் தண்ணீரை, இந்த சிறிய அணையில் தேக்கி வைக்க வேண்டும். வறட்சி காலங்களில் அணையில் இருந்து குடிநீருக்கு தண்ணீர் திறந்து விட வசதியாக இருக்கும்.
தற்போது கிராமங்களில் நிலவி வரும் குடிநீர் பிரச்னையை தீர்க்க, பில்லூர் அணைக்கு, நீலகிரி மாவட்டத்தில் உள்ள அணைகளில் இருந்து, 4 டி.எம்.சி., தண்ணீரை திறந்து விட, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த தண்ணீரை தொழிற்சாலைகளுக்கு வழங்கும் நீரின் அளவை குறைத்து, கிராமப் பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் பயன்பெறும் வகையில், ஆற்றில் தண்ணீர் சீராக வர, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கோரிக்கை மனுவில் கூறியுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b