தந்தை - மகள் உயிரிழந்த விவகாரத்தில் உடலை வாங்க மறுக்கும் உறவினர்கள் - போலீசார் திணறல்
திருநெல்வேலி, 25 மார்ச் (ஹி.ச.) திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள வடக்கு நெல்லையப்பபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 53). விவசாயி. இவர் கடந்த 17-ம் தேதி காலை தனது தோட்டத்திற்கு செல்லும் வழியில் மர்ம கும்பலால் இரும்பு ஆயுதங்களால
Moondradaippu Police Station


திருநெல்வேலி, 25 மார்ச் (ஹி.ச.)

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள வடக்கு நெல்லையப்பபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 53). விவசாயி.

இவர் கடந்த 17-ம் தேதி காலை தனது தோட்டத்திற்கு செல்லும் வழியில் மர்ம கும்பலால் இரும்பு ஆயுதங்களால் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்டார்.

இது குறித்து மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆனால் கொலையாளிகளை பிடிக்க முடியாமல் கடந்த ஒரு வாரமாக போலீசார் திணறி வந்தனர். இந்நிலையில் இடப்பிரச்சினையில் அதே ஊரை சேர்ந்த சிலருக்கு ஆறுமுகத்துடன் முன்விரோதம் இருந்தது.

அதன் காரணமாக அவர்கள் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் 3 பேரை பிடித்து கடந்த 3 நாட்களாக போலீசார் விசாரித்து வந்தனர்.

ஆனால் எவ்வித தடயங்களும் சிக்கவில்லை என்பதால் கொலையாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். இந்த வழக்கு அடுத்த கட்ட நகர்வுக்கு கூட செல்லமுடியாமல் இருக்கிறது.

இதனிடையே கொலை சம்பவத்தில் கொலையாளிகள் கைது செய்யப்படாத நிலையில், தந்தை இறந்த துக்கத்தில் ஆறுமுகத்தின் மகளான பேபி கனி (23) இரண்டு தினங்களுக்கு முன்பாக தனது தந்தையை கொடூரமாக கொலை செய்ததில் தற்பொழுது வரை குற்றவாளிகள் கைது செய்யாமல் இருப்பதால் விரக்தியில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவர் தனது கையில், கொலையுண்ட தனது தந்தையையும், தன்னையும் ஒன்றாக அடக்கம் செய்யுங்கள் என உருக்கமாக எழுதி வைத்துள்ளார். மேலும் அவர் எழுதிய தற்கொலை கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர். அதில், தனது உறவினர் தான் இந்த கொலைக்கு காரணம் என்றும், தனது அப்பாவை கொன்றவர்களை விரைவாக கைது செய்ய வேண்டும் என்று உருக்கமாக எழுதி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து மாணவி எழுதி வைத்திருந்த கடிதத்தின் அடிப்படையில் நெல்லையப்பபுரத்தை சேர்ந்த சூசைமுத்து (45),நெல்லையப்பபுரம் வடக்கு தெருவை சேர்ந்த பூல்பாண்டி மகன்களான செல்வகுமார்(35), ரமேஷ்(31) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

தொடர்ந்து அவர்கள் 3 பேரும் பேபி கனியை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர். இதனிடையே தந்தை-மகள் ஆகிய 2 பேரின் உடல்களையும் வாங்க அவர்களது உறவினர்கள் மறுப்பு தெரிவித்து விட்டனர்.

கொலைக்கான நோக்கம், கொலையாளிகள் யார் என்பது குறித்து எவ்வித தகவலும் தெரியவில்லை என்பதால் இன்று 9-வது நாளாக அவர்களது போராட்டம் நீடிக்கிறது.

Hindusthan Samachar / ANANDHAN