Enter your Email Address to subscribe to our newsletters

நாகப்பட்டினம், 25 மார்ச் (ஹி.ச.)
பிரசித்தி பெற்ற நாகூர் தர்கா அமைந்துள்ள நாகை எனும் நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியில் ஆண்டுதோறும் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படும் கந்தூரி விழாவில் இஸ்லாமியர்கள் மட்டுமன்றி அனைத்து மதத்தினரும் வழிபடுகின்றனர்.
இந்த விழா மத ஒற்றுமையின் சின்னமாகவும், நாகை மாவட்ட சுற்றுலாவின் அடையாளமாகவும் திகழ்கிறது.
இதேபோல நாகப்பட்டினத்தில் உள்ள சிக்கல் சிங்காரவேலர் கோயில், பழங்கால சிவன் கோயில், நாயனார் சங்கீதத்தில் புகழ் பெற்ற 275 பாடல் பெற்ற தலங்களில் ஒன்றான நீலாயதாட்சி அம்மன் கோயில் என புராதன சிறப்பு வாய்ந்த கோவில்கள் உள்ளன.
நாகை மாவட்டத்தில், நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.
நாகை மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, நாகப்பட்டினம் சட்டப்பேரவைத் தொகுதியில் 84,493 ஆண்கள், 88,464 பெண்கள், 22 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 1,72,979 வாக்காளர்கள் உள்ளனர்.
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் காட்சியைச் சேர்ந்த ஜெ. முகமது ஷா நவாஸ் 66,903 வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடிய நிலையில் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டு வருகின்றார்.
2021 ஆம் ஆண்டின் தேர்தலில் அதிமுகவின் தங்க. கதிரவன் 59,043 வாக்குகள் பெற்று 2ஆம் இடத்தையும், நாம் தமிழர் கட்சியின் அகஸ்டின் அற்புதராஜ் 9976 வாக்குகள் பெற்று 3 ஆம் இடத்தையும் பிடித்தனர்.
2026 தேர்தலில் களமிறங்க வாய்ப்புள்ள வேட்பாளர்கள்:
திமுக கூட்டணி- நாகை சட்டப்பேரவை தொகுதி திமுக கூட்டணியில், தொடர்ந்து கூட்டணி கட்சிகளுக்கே ஒதுக்கப்பட்டு வரும் நிலையில், இந்தமுறை நேரடியாக திமுக களம் காண வாய்ப்புள்ளது. நாகை தொகுதியில் திமுக போட்டியிட்டால் தற்போதைய அக்கட்சியின் மாவட்ட செயலர் என். கௌதமன் போட்டியிட வாய்ப்புள்ளது.
மீனவ சமுதாயம் அதிக கொண்ட நாகை தொகுதியில், மீன் வளர்ச்சிக் கழகத் தலைவராக பதவி வகிப்பதுடன், மீனவ சமூகத்தை சேர்ந்தவர் என்பதாலும் கௌதமனை கட்சித் தலைமை வேட்பாளராக தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது.
வேளாங்கண்ணி பகுதியைச் சேர்ந்த திமுக கீழையூர் ஒன்றியச் செயலர் தாமஸ் ஆல்வா எடிசன் நாகை தொகுதி வேட்பாளராக வாய்ப்புள்ளது. வேளாங்கண்ணி பேரூராட்சியின் துணைத் தலைவராக உள்ளவர், நாகை தொகுதியை மீண்டும் கேட்டுப்பெற விடுதலை சிறுத்தைகள் கட்சி தீவிர முயற்சி மேற்கொள்ளும் எனக் கூறப்படுகிறது.
இத்தொகுதி விசிகவிற்கு ஒதுக்கப்பட்டால், ஏற்கெனவே வெற்றிப்பெற்ற ஜெ.முகம்மது ஷா நவாஸ் களம் இறங்க வாய்ப்புள்ளது.
அதிமுக கூட்டணி -அதிமுக சார்பில் மீண்டும் நகரச் செயலர் தங்க.கதிரவன், முன்னாள் அமைச்சர் ஜெயபால் இருவரில் யாராவது ஒருவருக்கு வாய்ப்புள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தை பொறுத்த வரை நாகை தொகுதியில் தவெகவிற்கு ஆதரவு அதிகம் இருப்பதாகக் கூறப்படுவதால் அக்கட்சியின் தலைவர் விஜய் போட்டியிட வாய்ப்புள்ளதாக பேசப்பட்டு வருகிறது.
விஜய் போட்டியிடவில்லை என்றால், மகளிரணி மாவட்ட செயலர் சுகன்யா முகுந்தன், மாவட்ட செயலர் சுகுமாறன், கிங்ஸ்லி ஜெரால்ட் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.
நாகை சட்டப்பேரவை தொகுதியை மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்பதில் திமுக கூட்டணி தீவிரமாக பணியாற்றி வருகிறது. அதிமுகவினரும் முழு பலத்துடன் பணியாற்றி வருகின்றனர். மற்ற கட்சியினரும் பிரசாரங்களை மேற்கொண்டுள்ளனர். எனினும், நாகை சட்டப்பேரவை தொகுதியை பொறுத்தவரை போட்டி திமுக கூட்டணிக்கும், அதிமுக கூட்டணிக்கும் இடையே என்றே கூறப்படுகிறது.
நாகை மக்களின் எதிர்பார்ப்புகள்:
நாகை தொகுதி கடற்கரைப் பகுதியை மையமாகக்கொண்டது. மீன்வளம், வேளாண்மை முக்கிய வாழ்வாதாரமாக உள்ளன. தொழிற்சாலைகள் இல்லாததால் வேலைவாய்ப்பு குறைந்து காணப்படுவதுடன், இளைஞர்கள் வெளிமாவட்டங்களுக்கு வேலைக்காக இடம்பெயரும் நிலை உள்ளது. தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகள் உருவாக்க வேண்டும் என்பதே தொகுதி மக்களின் முக்கிய எதிர்பார்ப்பு.
துறைமுகம் மற்றும் தொழில்-வர்த்தக மையமாக திகழ்ந்த நாகப்பட்டினம், தற்போது தொழிற்சாலைகள் இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது. எனவே, இங்கு புதிய தொழிற்சாலைகள் அமைத்து வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.
கடல் அரிப்பை தடுக்க தற்போதைய தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டு கருங்கற்கள் கொட்டப்பட்ட நிலையில், கட்டுமான பணிகள் பாதியில் நிற்கிறது. தமிழக மீன்வர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல், மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தல் போன்ற நடவடிக்கைகளால் அவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் மீனவர்கள் தாங்கள் பெற்ற கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் உள்ளனர். அவர்களது கடன் பிரச்னையை தீர்க்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மாவட்ட மீனவர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
அரசு நேரடி கொள்முதல் செய்யப்படும் நெல்லை சேமிக்கும் வகையில் நிரந்தர கிடங்குகள் அமைக்கவேண்டும். பூதங்குடி தெற்குப்படுகையில் படுக்கையணை, பண்ணை குட்டைகளுக்கு இலவச மின் இணைப்பு, நாகை தொகுதியில் விவசாயிகள் பயன்படும் வகையில் கால்நடை சந்தை அமைக்க வேண்டும்.
வேளாண் பொருள்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய உணவுப் பூங்கா அமைக்க வேண்டும், மீன் பொருள்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய தொழிற்சாலைகள் ஏற்படுத்த வேண்டும், நாகை மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் விவசாய பொருள்களை கொண்டு செயல்படும் வகையில் நாகையில் தொழிற்சாலை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நாகை தொகுதி மக்கள் முன்னிறுத்தி உள்ளனர்.
நீண்டகாலமாக நிலுவையில் இருந்து நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்:
நாகை அருகேயுள்ள பனங்குடியில் மத்திய அரசின் பொதுத்துறை சிபிசிஎல் நிறுவனத்திற்கு பனங்குடி, நரிமணம், கோபுராஜபுரம் பகுதி விவசாயிகள் நிலம் வழங்கினர். ஆனால் நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்வு இழப்பீட்டுத் தொகை வழங்கவில்லை. இதனால், விவசாயிகள் 5 ஆண்டுகளாக போராடி வந்தனர்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு பலன் அளிக்கும் வகையில் தமிழக அரசு அரசாணை பிறப்பித்து 2,163 குடும்ப அட்டைத்தார்களுக்கு தலா ரூ. 5 லட்சம் கிடைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
சிறிய டைடல் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகள் போன்றவைகள் நாகை சட்டப்பேரவை தொகுதியின் வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது.
நாகூர் தர்காவின் வளர்ச்சிக்காக தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
Hindusthan Samachar / vidya.b