Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 25 மார்ச் (ஹி.ச.)
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 30 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வருகிற ஏப்ரல் மாதம் 9-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
இதற்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 16-ம் தேதி துவங்கிய நிலையில், வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது.
வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடந்து முடிந்து விட்டது. வேட்பு மனுக்களை நாளை வரை திரும்பப் பெறலாம்.
இந்நிலையில் புதுச்சேரியில் இந்தியா கூட்டணி சார்பில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் காங்கிரஸ்-16, திமுக-12, விசிக-1, இந்திய கம்யூனிஸ்ட்-1 என முடிவு செய்யப்பட்டது.
முன்னதாக, தொகுதி பங்கிட்டு நீடித்த இழுபறியால் நேரமின்மை காரணமாக காங்கிரஸ் திமுகவை சேர்ந்த இரு தரப்பு வேட்பாளர்களுக்கும் ஏ பார்ம், பி பார்ம் கொடுக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.
தொகுதி பங்கீடு இறுதியான பின்னர் கூடுதலாக தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவது என முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்தியா கூட்டணியில் திமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள காலப்பட்டு, ராஜ்பவன்,நெல்லித்தோப்பு, மங்கலம், மற்றும் திருபுவனை (தனி) ஆகிய 5 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.
இந்த ஐந்து தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை வாபஸ் பெற மறுத்து வருகின்றனர்.
அவர்களை காங்கிரஸ் தலைமை தொடர்பு கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் சிக்கல் எழுந்துள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam