Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 25 மார்ச் (ஹி.ச.)
தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே உள்ள நெல்கட்டும்செவல் பகுதியை சேர்ந்த மாரிசாமி - வேல்மயில் தம்பதியினரின் 4 வயது குழந்தையான யாழினி ஸ்ரீ என்ற சிறுமி புளியங்குடி சிந்தாமணி பகுதியில் செயல்பட்டு வரும் கண்ணா மெட்ரிகுலேஷன் பள்ளியில் பயின்று வந்த நிலையில், நேற்று மாலை பள்ளி வளாகத்திற்குள் சிறுமி மீது சொகுசு கார் மோதியதில் சிறுமி சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார்.
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், பள்ளி வளாகத்திற்குள் சிறுமி விபத்தில் சிக்கியது எப்படி? இதில் தொடர்புடையவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் எனக்கூறி சிறுமியின் உறவினர்கள் நேற்று மாலை முதல் தற்போது வரை திருமங்கலம்- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுமார் 12 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வரும் இந்த சாலை மறியல் காரணமாக கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மாற்று வழியில் தற்போது போக்குவரத்தானது இயக்கப்பட்டு வருகிறது.
மேலும், சிறுமியின் உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தற்போது 7 நபர்களிடம் புளியங்குடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், விசாரணை முடிவுக்கு பிறகு குற்றவாளி உடனடியாக கைது செய்யப்படுவார் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN